tamilnadu

img

இன்று குழந்தைகள் தினம் : திரைப்படங்களை கொண்டாடிய ‘பாலர் பூங்கா’

மதுரை, நவ.13-  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14  குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், தன்னலமற்ற கள்ளம் கபடமற்ற பேதமற்ற குழந்தைகளை ஆரோக்கியமாக அன்பாக வளர்த்தெடுக்கும் பணியை செய்து பாலர் பூங்கா அமைப்பு குழந்தைகளுக்கான திரைப்படங்களை திரையிட்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   மதுரை பாலர் பூங்கா சார்பில் “திரைப்படங்களும் கொண்டாட்டங்களும்” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகளுக்கான குறு திரைப்படங்கள் திரையிடல் நிகழ்ச்சி ஞாயிறன்று மதுரை சிம்மக்கல் அண்ணாமலை திரையரங்கில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற்ற இந்த திரையிடல் நிகழ்ச்சியில் குழந்தைகள் அரங்கம் நிறைந்த கட்சியாக குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு குறும்படம் திரையிடும்போது குழந்தைகளிடம் உற்சாகத்தை காணமுடிந்தது. மதுரை மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் திரையரங்கில் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரைப்படத்தை கண்டுரசித்தனர்.    

குடும்பத்துடன் சென்று திரைப்படம் பார்க்க முடியாத அளவிற்கு கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் ஒரு மணி நேரம் குழந்தைகள் திரைப்படம் திரையிடுவதற்கு அனுமதி அளித்த அண்ணாமலை சினிமாஸ் திரையரங்க உரிமையாளரையும் குழந்தைகளுக்கான திரைப்படங்களை திரையிட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்ட மதுரை மாவட்ட பாலர் பூங்கா நிர்வாகிகளையும் குழந்தைகளின் பெற்றோர் பாராட்டினர். நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு முற்போக்கு அமைப்புகள் பொதுவெளிகளிலும் அரங்கங்களிலும் திரைப்படங்களை திரையிட்டு மக்களுக்கு இலவசமாக காண்பித்து வருகின்றன.  என்றைக்கு திரையரங்குகள் கார்ப்பரேட்மயமானதோ அன்றிலிருந்து திரையரங்கிற்கு சாமானிய மக்கள் வருகை என்பது குறைந்துவிட்டது.

அதை மாற்றும் வகையில் பல்வேறு வெகுஜன அமைப்புகள் இது போன்ற சிறு திரையிடல் நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில்  ஏற்பாடு செய்து மக்களுக்கு காண்பித்து வருகிறார்கள்.  அந்த வகையில் குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்று மதுரை பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர்கள் பி. கோபிநாத், உமா மகேஸ்வரன், எம்.கண்ணன்,  ஜி.பாலகிருஷ்ணன், ரமேஷ், வடிவேல், நிருபனா, தமிழரசன், கடசாரி, அட்சயா உள்ளிட்டோர் முயற்சி எடுத்து இந்த திரையிடலுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.  இதுபோன்ற திரையிடல் நிகழ்ச்சிகள் பள்ளிக்குழந்தைகளுக்கு நல்ல சினிமா எது என்பதை தெளிவுபடுத்தி, அவர்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டுசேர்க்கும். சினிமா என்பது பொழுதுபோக்குவதற்காக அல்ல, மக்களின் முன்னேற்றத்திற்காக ,சமூகமாற்றத்திற்காக  பயன்படுத்த முடியும். அதற்கு இந்நிகழ்ச்சி ஒரு தூண்டுகோலாக அமையும் என, குழந்தைகளை அழைத்து வந்திருந்த பெற்றோர் கூறினர். -ந.நி.