அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு எதிராக மோடி அரசின் பாராமுகம்
திருப்பூரில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
ஓரணியில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள்
திருப்பூர், செப். 2 - இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 50 சதவிகித வரி விதித்துள்ள நிலையில், உள்நாட்டு ஏற்றுமதி தொழில் துறையைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத, மோடி அரசின் பாராமுகத்துக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஓரணியில் திரண்டன. திருப்பூரில் பல்லாயிரக்கணக்கா னோர் திரண்ட பேரெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிவாரண- மீட்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்காத மோடி அரசு
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே இருக்கும் 14 முதல் 16 சதவிகித வரியுடன் கூடுதலாக 50 சதவிகித வரி விதிப்பு ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் திருப்பூர் பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித் தொழில், கடல் உணவு, தோல் பொருட்கள் மற்றும் தமிழகத்தின் உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இப்பிரச்சனையில் தொழிற்துறையினரின் கருத்துக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே ஒன்றிய அரசின் கவனத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் இதன் மீது மோடி அரசு பாராமுகமாக நடந்து கொண்டுள்ளது. இதுவரை எவ்வித நிவாரணம் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை.
சு. வெங்கடேசன் எம்.பி. பங்கேற்று கண்டன உரை
இதற்கு எதிராக திருப்பூரில் தியாகி குமரன் நினைவகம் முன்பாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பேரெழுச்சி ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை திமுகவின் மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஒருங்கிணைத்தார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தலைமை ஏற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் சு. வெங்கடேசன் எம்.பி., இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் எம்.பி. கே. சுப்பராயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திருமாவளவன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் பழ. அதியமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் முகமது அபுபக்கர், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் தங்கவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கண்ணன், த.பெ.திக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பிரச்சனைகளை எடுத்துரைத்த ஏற்றுமதியாளர் சங்கத்தினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலை வர்கள், ஏகாதிபத்திய அமெரிக்காவின் வரி விதிப்பு யுத்தத்தை கண்டித்தும், மோடி அர சின் தவறான பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளை விமர்சித்தும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை காக்கவும், ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தைக்காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். முன்னதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச்செய லாளர் திருக்குமரன் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை, நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்துப் பேசினார். திமுக மத்திய மாவட்டச் செயலாளர் க. செல்வ ராஜ் எம்எல்ஏ வரவேற்றார். மேயர் தினேஷ்குமார் உள்பட திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, விசிக, கொமதேக உள்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கினர். திருப்பூர் ஏற்றுமதி தொழிலைக் காக்கும் கோரிக்கை கள் அடங்கிய பதாகைகளை உயர்த்திப் பிடித்திருந்தனர். தமிழிலும், இந்தியிலும் கோரிக்கை அட்டைகளை ஏந்தி யிருந்தனர். மோடி - டிரம்ப் இருவரது முகங்களை ஒன்றாக இணைத்த முகமூடியும் அணிந்திருந்தனர்.