திருக்குறள், திருவாசகம் ஆய்வாளர்களுக்கு விருது விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், ஜூலை 12- தமிழ்நாடு அறக்கட்டளையின் “கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டம்” சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில், திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டு (தலா ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை www.tnfindia.org என்ற அறக்கட்டளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், தமிழ்நாடு அறக்கட்டளை, எண் 27, டைலர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு 15.09.2025 திங்கள் மாலை 5 மணிக்குள் கிடைக்கப்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர், ஜூலை 12- தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர், இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக, தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுகோள்
தஞ்சாவூர், ஜூலை 12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் கௌதமன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில், “அகல ரயில் பாதை திட்டத்திற்கு முன்பாக இயக்கப்பட்ட காரைக்குடி - சென்னை எக்மோர் விரைவு ரயிலான கம்பன் எக்ஸ்பிரஸை மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் வண்டி எண் 20683 மற்றும் 20684 பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல திருச்சி கோட்ட மேலாளர், சென்னை தென்னக ரயில்வே மேலாளர் பரிந்துரையை தில்லி ரயில்வே போர்டு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.