tamilnadu

img

பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பால் பல பிரச்சனைகளுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது

சென்னை, மே 19- நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திய ஒரு போராட்ட தளபதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் திகழ்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு  31 ஆண்டுகள் கழித்து புதனன்று (மே 18) விடு தலையான பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர், அவர் களது போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சென்னை தி.நக ரில் உள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் வியாழனன்று (மே 19) சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குண சேகரன், மாநிலக் குழு உறுப்பினர் வே.ராஜ சேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தன்னுடைய 19 வயதில் சிறைக்கு சென்று 50 வயது நிறைவு பெறும் நிலையில், ஏறக்குறைய 31 ஆண்டுகள் கழித்து தற்போது பேரறிவாளன் விடுதலை செய்யப் பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு  பேரறிவாளனுக்கு விடுதலை அளித்திருப் பது மட்டுமல்ல, இந்தியாவில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த தீர்ப்பின் மூலம் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஒன்றிய அரசு வாதம் தவிடுபொடி கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற வர்களை விடுதலை செய்வதற்கான அதி காரம் மாநில அரசுகளுக்கு உள்ளதா இல்லையா என்பது குறித்து அந்த தீர்ப்பு மிகத்  தெளிவாக கூறுகிறது. மாநில அமைச்சர வை இதுபோன்ற வழக்குகளில் ஒரு முடி வெடுத்து விட்டால் ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டுமே தவிர, ஒன்றிய அரசுக்கோ, குடி யரசுத் தலைவருக்கோ சிபாரிசு செய்வதற்கான அதிகாரம் இல்லை; தமிழக  ஆளுநர் செய்திருப்பது அரசியல் சாச னத்திற்கு ஏற்புடையதல்ல என்று மிக அழுத்தமாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ள னர். ஒன்றிய அரசு சார்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து எதிர்ப்பு  வாதங்களையும் நீதிபதிகள் தவிடுபொடி யாக்கி இருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் வழக்கறிஞர் இது போன்ற வழக்குகளில் ஆளுநர் விடுதலை செய்வதற்கோ, மாநில அரசு விடுதலை செய்வதற்கோ உரிமை இல்லை என்று கூறிய போது, அப்படியானால் இவ்வளவு ஆண்டு காலம் பலரை விடுதலை செய்திருக்கிறார் களே அதெல்லாம் தவறு என்கிறீர்களா; மாநில அரசுக்கோ, ஆளுநருக்கோ அந்த உரிமை இல்லை என்றால், 166ஆவது பிரிவு  எதற்காக அரசியல் சட்டத்தில் உள்ளது என்ற  கேள்விகளை எழுப்பியதன் மூலம், மாநில அரசு எடுக்கும் முடிவுகளை கட்டுப் படுத்துவதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தி யுள்ளனர்.

சிறந்த போராட்டத் தளபதி அற்புதம்மாள்

31 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன்  விடுதலை பெற்றிருப்பது, அவரது குடும்பத் தினருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மகிழ்ச்சியான நாள்தான். அவரின் தாயார் அற்புதம்மாள் ஒரு அற்புதமான சட்டப் போராட்டத்தை தன்னுடைய மகனுக்காக மட்டுமல்ல, அரசியல் சட்டம் தெளிவுபடுத்த வேண்டிய கடமைகளுக்காகவும் நடத்தி யிருக்கிறார். அமைச்சர்களை, அனைத்து அர சியல் கட்சித் தலைவர்களை, சமூக அமைப்பு களை, வழக்கறிஞர்களை சந்தித்து நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திய ஒரு போராட்ட தளபதியாகத் திகழ்ந்திருக்கிறார்.  பெண்கள் எப்படி எல்லாம் பொது தளத்தில் பணியாற்ற வேண்டும், சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என்பதற்கு அற்புதம்மாள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவருக்கும், விடுதலை பெற்று வந்துள்ள பேரறிவாளனுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிவாளன் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது மீதமுள்ள வாழ்நாளை அனுபவிக்க வேண்டும். மனித உரிமைகளுக்காக, ஜனநாயக உரிமைகளுக்காக அரசியல் சட்டம் வழங்கியிருக்கக் கூடிய அடிப்படை கோட்பாடுகளை பாதுகாப்பதற்காக அவர் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் சிறையிலிருக்கும் 6 பேர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இந்த 6 பேர் மட்டுமல்ல, சிறைத் தண்டனை முடிந்தும் சிறையில் இருப்ப வர்களையும், விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் சிறையில் இருப்பவர்களையும், விசாரணையே இல்லாமல் நீண்டகாலமாக சிறைகளில் வாழும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களையும் விடுதலை செய்ய மாநில அரசு முன்வர வேண்டும்என்றார். பேரறிவாளனின் எதிர்காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறதே என்ற கேள்விக்கு, அவர் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை துவக்குவதற்கு என்ன கோரிக்கை விடுக்கிறாரோ அதை மாநில அரசு செய்துதரமுன்வர வேண்டும். ஏனென்றால் ஒன்றிய அரசு உதவும் என்ற நம்பிக்கை இல்லை என்றார். பின்னர் பேரறிவாளன் செய்தியாளர்களி டம் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி எங்களுடைய நீண்ட நெடிய நீதிக்கான போராட்டத்திற்கு தொடர்ந்து உறுதுணை யாக இருந்தது. பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றி இருக்கிறார்கள். பல போராட்டங் களில் பங்கெடுத்துள்ளார்கள். அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி உள்ளனர். இப்படி பல வகைகளில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களை சந்தித்து நன்றி தெரிவித்தோம் என்றார்.
 

;