மதுரை, செப்.21- இஸ்ரோவுக்கு வாய்ப்பூட்டு போட்டது ஒன்றிய பாஜக அரசு என்று புதிய நாடாளுமன்றத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் தனது முதல் உரையின்போது குற்றம்சாட்டி னார். தனது உரையில் அவர் கூறுகையில், ‘‘புதிய நாடாளுமன்றத்தின் முதல் உரை; சந்திரயானு டைய வெற்றிக்கான பாராட்டு உரையாக அமைந்தது மகிழ்வளிக்கிறது. சந்திரயான்-3 வெற்றி பயணத்திலே ஈடுபட்ட இஸ்ரோவினுடைய அனைத்து விஞ்ஞானி களுக்கும் எனது வாழ்த்துகள். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தை தீர்மானித்து நிலவின் வழித்தடத்தை துல்லியமாக கணித்து இறங்கியது. தொழில்நுட்ப துறையில் நம்முடைய பாய்ச்சல் வேகம் முன்னேற்றத்தினுடைய ஒரு சான்று. உலகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிலவு நோக்கி 7 பயணங்கள் நிகழ முயற்சி நடந்து இருக் கிறது. அதில் நான்கில் தோல்வி அடைந்திருக்கிறது; மூன்று வெற்றி. ஒன்று இந்தியா, இரண்டு சீனா. மிகத் துல்லியமான இடத்தை வெறும் அரை கிலோமீட்டர் நீளம் 2 கிலோ மீட்டர் அகலத்தில் மிகச் சரியாக போய் விண்கலத்தை இறக்கிய நம்முடைய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். வேத புராணங்களை பற்றிய விவாதமா? ஆனால், இந்த அவையில் காலையில் இருந்து நடக்கிற விவாதம் உண்மையில் மிகுந்த கவலை அளிக்கிறது. இது விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு விவாதமா அல்லது வேத புராணங் களை பற்றிய விவாதமா? என்ற குழப்பம் இருக்கிறது.
இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர், புராண-இதிகாச கதைகளை அவ்வ ளவு நேரம் பேசினார். அதை கேட்பதற்கு புதிய நாடாளுமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கோவில் மடத்திலே அமர்ந்தால் நல்ல கதாகாலட்சேபத்தை நான் கேட்க முடியும். எனக்கு முன்பு பேசிய ஆளுங்கட்சியின் எம்.பி., தஞ்சாவூரில் இருக்கிற நூலகத்தில் ஓலைச்சுவடி யில் பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பு விமானத்தை அனுப்பியதற்கான விவரங்கள் அடங்கிய ஏட்டு சுவடிகள் இருக்கிறது என்று கூறினார். நான் இரண்டு விஷயங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அதைவிட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் அங்கே இருக்கிறது. ஆனால், அதெல்லாம் கதைகள்; வரலாறு கிடையாது, அல்லது அறிவியல் கிடையாது. இரண்டாவது அந்த நூலகத்திற்கு கூட மோடி அரசு கொடுக்க வேண்டிய நிதியை கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காமல் வைத்திருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இரண்டாவது கேள்வி ஒரு ஓலைச்சுவடி எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. எவ்வளவு பாதுகாத்தாலும் அதிகபட்சம் 1000 ஆண்டுகளுக்குள் தான் ஓலை சுவடிகள் இருக்கும். ஆய்வாளர்களுக்கு ஒதுக்கியது ‘0’ நாம் அறிவியல் சூழ லில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம். இந்தியா வில் 10 லட்சம் பேரில் 262 அறிவியல் ஆய் வாளர்கள் தான் இருக்கிறார்கள். அதுவே சீனாவில் 2,500 பேர். பிரிக்ஸ் நாடுகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில் நாம் தான்.
அதேபோல ஆய்வுக்கு நாம் ஒதுக்குகிற நிதி ஒரு வருக்கு 43 டாலர் தான் நம் ஒதுக்குகிறோம். பிரேசில் 173 டாலர் ஒதுக்குகிறது. ரஷ்யா 285 டாலர் ஒதுக்கு கிறது. அது மட்டுமல்ல இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பல்வேறு ஆய்வு களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவியல் துறையில் பணி யாற்றுகிற ஆய்வாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒன்றிய அரசு கொடுத்து இருக்கிற நிதி பூஜ்ஜியம். வெறும் செங் கல்லை வைத்து எய்ம்ஸ் படத்தை காட்டுவதைப் போல வெறும் வாய்ச்சவடாலை வைத்து சந்திர யான் படத்தை காட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. தனியாரிடம் எஸ்எஸ்எல்வி தயாரிப்பு இதனுடைய உச்சமாக இரண்டு விஷயங் களை நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டி ருக்கிறேன். ஒன்று எஸ்எஸ்எல்வி (SSLV) ராக்கெட்டை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதற் கான தேவை இன்றைக்கு அதிகமாகி இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணிலே அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், இன்றைக்கு எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாருக்கு கொடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அதாவது லாபகர மான விஷயங்களை தனியாருக்கு கொடுத்து விட்டு, இஸ்ரோவை நட்டத்திலே காட்டுகிற ஒரு வேலை.
‘அதானி சக்தி’
விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்று பெயர் வைத்த நமது பிரதமர், எஸ் எஸ்எல்வி தனியாருக்கு கொடுக்கிற இந்த மிஷ னுக்கு ‘அதானி சக்தி’ என்று பெயர் வைப்பாரா. அதேபோல இந்த 10 ஆண்டுகளில் எத்தனை யோ வேத ஆய்வு நிறுவனங்களை ஒன்றிய அரசு துவக்கி இருக்கிறது, ஜோதிட ஆய்வு நிறுவனங் களை துவக்கி இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு அறி வியல் ஆய்வு நிறுவனத்தை கூட ஒன்றிய அரசு துவக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைக்கு இந்த அவை பாராட்டுகிற இஸ்ரோ வுக்கு இதே ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி ஒன்றிய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. ‘இஸ்ரோவுக்கு வாய்ப்பூட்டு’ அதில், ஜோதிமத் நிலச்சரிவு விஷயத்தில் ‘‘இஸ்ரோவும் நிலவியல் துறையும் வாய் திறந்து பேசக்கூடாது’’ என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. எப்படி பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொன்ன கலிலியோவுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டீர்களோ அதே போல இஸ்ரோவுக்கு நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அறிவியல் என்பதும் விஞ்ஞானம் என்பதும் கேள்வியில் தான் பிறக்கிறது. இந்தியாவினுடைய அனைத்து முன்னேற்றமும் அறிவியல் பூர்வமான பார்வையிலிருந்து உருவானவை. அவற்றை யெல்லாம் மறுதலித்து புராணங்களை வரலாறு என்றும் இதிகாசங்களை அறிவியல் என்றும் மீண்டும் மீண்டும் நீங்கள் நிலைநிறுத்த நினைக் கிறீர்கள். அது உங்களை உங்களுடைய பார்வை யை மக்களிடம் வந்து அம்பலப்படுத்துவதற்கு தான் உதவி செய்யும்.
உங்களின் பொய்யும் கதைகளும் கீழே விழும்
எப்படி ஒரு ராக்கெட் விண்ணில் போகும் போது. அது உதிர்த்து கீழே தள்ளுகிற எரிபொரு ளைப் போல உங்களது பொய்யும் கதைகளும் கீழே விழும். உங்களது மூடநம்பிக்கையை தகர்த்து இந்தியாவின் அறிவியல் தலைமுறை முன்னேறும் என்பதை சந்திரயான் பறைசாற்று கிறது’’ என்றார்.