tamilnadu

img

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தமிழக அரசு புறக்கணிக்கக் கூடாது! - ச.மயில்

அரசு உதவிபெறும் பள்ளிகளை தமிழக அரசு சமீப காலமாக மாற்றந்தாய் மனப் பான்மையுடன் கையாளுவதாக பல்வேறு  தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வந்து கொண்டிருக் கின்றன. இதில் பெருமளவு உண்மை இருப்பதை நாம் உணர முடிகிறது.  அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆகியவற்றுக்கிடையே மிகப் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. நிர்வாக ரீதியாக மட்டுமே வேறு பாடு உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் பள்ளிக் குழுக்கள் அல்லது பள்ளி முகவாண்மை மூலமாக இயக்கப்படுகின்றன. அரசின் விதிமுறைகளுக்கும், கல்வித்துறையின் ஆளுகைக்கும் உட்பட்டே உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணி யாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அரசு ஊழியர் பணி விதிகளுக்கு உட்பட்டே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசே ஊதியம் உள்ளிட்ட பணிக்கால பலன்களை வழங்கி வருகிறது. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு தமிழ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முறையான அடிப்படைக் கல்வியை வழங்குவதற்கு பள்ளிகள் இல்லை. இத்தகு சூழலில் மக்களுக்கு கல்வியறிவைப் புகட்டுவதற்காக கிறிஸ்தவ மிஷனரிகளாலும், சேவை உள்ளம் கொண்ட செல்வந்தர்களாலும் லாப நோக்கமின்றி தொடங்கப்பட்டவைதான் அரசு உதவி பெறும் பள்ளிகள். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் இவற்றின் பங்கு அளப்பரியது.

இந்தியா விடுதலை பெற்ற பின்பும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமப் பகுதிகளில் அடிப்படைக் கல்வி யை வழங்கும் பள்ளிகள் இல்லாத சூழலில் கல்வியறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது தமிழ்நாட்டின் எழுத்தறிவு 15 சதவீதமாகவே இருந்தது. 85 சதவீதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாகவே இருந்தனர். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசால் பள்ளிகளைத் தொடங்க இயலவில்லை. அதற்குரிய நிதிநிலை அரசிடம் இருக்கவில்லை. இச்சூழலில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் குக் கிராமங்களில் எல்லாம் பள்ளிகள் திறக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது. தமிழக அரசு ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது. அரசால் அனைத்துக் கிராமங்களிலும், நகரப் பகுதிகளிலும் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழலில் செல்வந்தர்கள் சிலர் பள்ளி கள் திறப்பதற்குரிய அடிப்படை வசதிகளைச் செய்து பள்ளிகளை நடத்த முன் வந்தனர். அரசும் அதற்கு அனுமதி வழங்கியது. இவ்வாறு பள்ளிகள் தொடங்கப்பட்டதன் ஒற்றை நோக்கம் எழுத்தறிவற்ற மக்களுக்குக் கல்வி புகட்டுவது மட்டும்தான். ஆனால் இன்றைய சூழலில் பல அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகங்கள் லாப நோக்குடன் செயல்படுவதையும் மறுக்க இயலாது. எனினும் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த கல்வி வளர்ச்சியில் உதவிபெறும் பள்ளிக ளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்க ளுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. இந்த இரண்டு வகைப் பள்ளிகளிலுமே இலவசக் கல்விதான் வழங் கப்படுகிறது. இரண்டு வகைப் பள்ளிகளிலுமே ஏழைக் குழந்தைகள் தான் கல்வி பயிலுகின்றனர். இந்த ஏழைக் குழந்தைகள் தங்கள் பகுதியில் அரசுப் பள்ளிகள் இல்லாத சூழலில் தான் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் சேர்ந்து பயிலுகின்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் இருந்த காரணத்தினாலேயே அப்பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் அரசுப்பள்ளிகள் தொடங் கப்படவில்லை என்பதுதான் உண்மை. எனவே தான் தங்கள் பகுதியில் இருக்கும் உதவிபெறும் பள்ளிக ளில் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். காலங்காலமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு வழங்கப்படும் அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு இந்த இரண்டு வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்க ளையும் வேறுபடுத்திப் பார்ப்பதைக் காணமுடிகிறது. இது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற, பயின்று கொண்டிருக்கிற மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்நட வடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மாண வர்கள் என்பதை மிகக் கவனமாக உற்று நோக்க வேண்டியுள்ளது.

கடந்த அ.தி.மு.க அரசு, கடைப்பிடித்ததும் தற்போ தைய தி.மு.க அரசு கடைப்பிடிப்பதும் ஒரே மாதிரியான அணுகுமுறையாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் எதிர் காலத்தை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள கீழ்கண்ட நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியவை. · அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத தனி இட ஒதுக்கீடு. · அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு.

· அரசுப்பள்ளிகளில் கல்வி பயின்ற மாணவி களுக்கு உயர்கல்வி பயிலும் போது மாதம் ரூ.1000 உதவித்தொகை. · அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கவிருப்பது.

மேற்கண்ட திட்டங்கள் அரசு உதவி பெறும் பள்ளி களில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கும் விரிவுபடுத் தப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப் படவில்லை எனில் அது சமூக நீதிக்கு எதிரானதாகவே அமையும். தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அரசுப்  பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. எனவே, தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது போன்று அரசு உதவி பெறும் பள்ளி  மாணவர்களுக்கு 2.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அதே போன்று அரசுத்துறைகளின் வேலை வாய்ப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனியாக 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும், ரூ.1000 உதவித்தொகை, காலைச் சிற்றுண்டி ஆகியவையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்க ளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களையும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் பல ஆண்டுகளா கச் சமமாகப் பாவித்து வந்த தமிழக அரசு சமீப காலமாக பாகுபடுத்தி பார்ப்பதற்கு தமிழக அரசின் சில உயர் அலுவலர்களின் நிலைப்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, ஆட்சிப் பொறுப்பில் உள்ள வர்கள் யதார்த்த நிலையை உணர்ந்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லை யெனில் ஏழை மாணவர்களில் ஒரு பகுதியினர் நிரந்தர மான பாதிப்புக்கு உள்ளாவார்கள். மேலும், ஏழை எளிய கிராமப்புற மக்கள் பயிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொள்ளும். இதனால் மிக அதிகமாக பாதிக்கப்படப்போவது அப்பகுதியில் வாழும் ஏழைக் குழந்தைகள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தமிழக அரசு இது தொ டர்பாக உடனடியாக ஒரு குழுவை அமைத்து விரைவு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய துணைத்தலைவர், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு