tamilnadu

கோயில் அடிமனைகளில் குடியிருப்பவர்களை அச்சுறுத்தும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக!

சென்னை, மார்ச் 1 -  தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு முழுவதும் கோயில் இடங்களில் நீண்டகாலமாக குடியிருப்பவர்கள், விவசாய நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்திருப்போருக்கு நியாய வாடகை/ குத்தகை நிர்ணயிக்கிறோம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை கடந்த  காலத்தில் உயர்த்தப்பட்டது. பயனாளிகளால் கட்டமுடியாத அளவிற்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்திட வேண்டுமென பல போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலை யில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப் பிற்கு வந்தது. தேர்தல் வாக்குறுதியில் இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வை உருவாக்கு வோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்து அறநிலையத்துறை அமைச்ச ராக  .பி.கே.சேகர்பாபு பொறுப்பேற்றதிலிருந்து தினந்தோறும் பல அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

இத்துறையின் ஆணையர் வானளாவிய அதிகாரம் படைத்தவர் போல் பல்வேறு உத்தரவுகளை வெளியிடுகிறார். இவை அனைத்தும் சாதாரண ஏழை, எளிய கோயில் இடங்களை பயன்படுத்தி வருபவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது. பல இடங்களில் வாடகை பாக்கி பல லட்சம் கட்ட வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பு கின்றனர். உடன் கட்ட தவறினால் வீடுகளை பூட்டி சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றனர். புதிய வாடகை நிர்ணயிப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்துவிட்டு, அந்த குழு கூடி எந்த முடிவும் எடுக்காத நிலையில் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதை கண்டித்தும், அறநிலையத்துறை கட்டிட, நில வாடகை நிலுவையை வசூலிப்பதற்காக 25.2.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கோயில் இடங்களை பயன்படுத்துபவர்கள் நிலுவை வைத்துள்ள வாடகை பாக்கிகளை வசூலிப்ப தற்கு அந்த பயனாளிகளின் இதர அசையும், அசையா சொத்துக்களின் முழு விவரங்களை வருவாய்த்துறை மூலம் பெற்று, அதில் அசையும் சொத்துக்களை ஏலத்தில் விட அறிவிப்பு செய்து ஏலம் விடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்து சமய  அறநிலையத்துறை சட்டத்தில் வாடகை பாக்கி வசூலிப்பதற்கு இப்படி எந்த சட்டப்பிரிவும் இல்லாத நிலையில் வானளாவிய அதிகாரம் படைத்தவர் போல் பல உத்தரவுகளை வெளியிடுகிறார். பொதுவாக வங்கிகளில் கடன் பெறு வோர்கள் எந்த சொத்தை வைத்து கடன் பெறுகிறார்களோ, அந்த சொத்தை தான் கடன் கட்டவில்லை என்றால் வங்கிகள் ஏலத்திற்கு கொண்டு வருகின்றன. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயில் இடங்களில் காலம் காலமாக அடி மனைகளில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களையும், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளையும் அச்சுறுத்துவதை போல் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்ச் 18 அன்று தமிழ்நாடு அனைத்து சமய  நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு  சங்கத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.