tamilnadu

img

ஒரே வானம் ஒரே பூமி கடல் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மாசுபடுதல் முதல் மீன்வளச் சுரண்டல் வரை உலகை பாதிக்கும் கடல் சூழல் குறித்த “ஒரே கடல்”  (One Ocean) என்ற முதல் கடல்சார் உச்சிமாநாடு பிரான்சில் பிரிட்டனி (Brittany) என்ற இடத்திற்கு அருகில் இருக்கும்  ப்ரெஸ்ட் துறைமுகத்தில் நிகழ்கிறது. உலக நாடுகளின் தலை வர்கள், பெரிய மீன் பிடி நிறுவனங்கள், சூழல் செயல்பாட்டா ளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.'

எதற்கு இந்த மாநாடு?

சட்டத்திற்குப் புறம்பாக மீன் பிடித்தல், கார்பன் உமிழ்வற்ற கப்பல் போக்குவரத்து, பிளாஸ்டிக் மாசுகளின் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து பேச இந்த மாநாடு கூட்டப்படு கிறது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக பிரான்ஸ் நாட்டின் வட மற்றும் தென் துருவப்பகுதிகளுக்கான கண்காணிப் பாளர் மற்றும் கடல்சார் விஷயங்களுக்கான பொறுப்பு வகிக்கும்  ஆலிவர் போய்வ்ரி டார்வர்  (Olivier Poivre Darvor) செயல்படு கிறார். கிளாஸ்கோ சூழல் உச்சிமாநாடு போலவே இதுவும் காப்  (Cop) எனப்படும் உறுப்புநாடுகளின் கூட்டமாக நடைபெறுகிறது. கடல்சார் சூழலுடன் மனிதனுக்கு பசுமையாக இருந்த உறவுகள் நஞ்சு கலந்ததால் உலகளாவிய புவி வெப்பம் கடல்களில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானு வெல் மேக்ரானின் முன் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இந்த மாநாடு உலக நாடுகளுக்கு இடையில் கடல்சார் அம்சங்களில் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல்சார் விஞ்ஞான ஆய்வுகளை ஒன்றுபட்டு நடத்த இம்மா நாடு வழிவகுக்கும். பூமியின் 70% பகுதியில் அமைந்திருக்கும் கடலே உலகின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடல் அதிக வளங்களை தன்னுள் கொண் டுள்ள பகுதி. வணிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்கு வரத்தே நாடுகளை இணைக்கிறது. என்றாலும் சர்வதேச உச்சி மாநாடுகளில் கடல் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. இன்று கடல்கள் பலவித காரணங்களால் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அதனால் ப்ரெஸ்ட் நகரில் கூடும் இந்த முதல் உலகக் கடல்சார் உச்சிமாநாடு வெறும் வாக்குறுதிகளில் மூழ்கிவிடாமல் உருப்படியான செயல்களில் ஈடுபட உறுதியான தீர்மானங்களை எடுக்க உதவும் என்று சூழலியலாளர்கள் நம்புகின்றனர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஆலிவர் ஒரு கடற்பயணி  மற்றும் கருத்தாளர். இவர் சமீபத்தில் எழுதிய “பிரான்ஸின் கடல்கள் வழியே ஒரு பயணம்” (Travels in France’s Seas)  புகழ்பெற்ற ஒரு நூல். சர்வதேச அளவில் கடல்சார் வலிமை யில் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாவது வல்லர சாக உள்ளது. 11 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பில் பொருளாதார  மண்டலங்கள் இந்நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுகின்றன.

நீல ராஜதந்திரம் (Blue Diplomacy)'

கடற்கொள்ளை முதல் மாசுபடுதல் வரை, மீன் வளச் சுரண்டல் முதல் கார்பன் சேமிப்பு வரை பல்வேறு பிரிவுகளில்  சூழலுக்கு கேடு தராதவகையில் கடல்வளத்தைப் பயன்படுத்து வதன் மூலம் நீலப் பொருளாதாரத்தை ஏற்படுத்தலாம். இதனால்  நாடுகளுக்கு இடையில் நீல ராஜதந்திரத்தை வளர்க்கமுடியும் என்று ஆலிவர் கூறுகிறார். இம்மாநாட்டிற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வருகை தருகின்றனர். இதில் 19 நாடுகளின் ஆட்சியாளர்கள் நேரடியாக பங்கேற்கின்றனர். இதே அளவு தலைவர்கள் வீடியோ மற்றும் பதிவு செய்த  செய்தி மூலம் கலந்துகொள்கின்றனர். உலகின் 55 சதவிகிதத் திற்கும் கூடுதலான கடல் வணிகத்தை நடத்தும் மிகப்பெரிய பந்நாட்டு கடல்சார் வியாபார நிறுவனங்களான மேர்ஸ்க் (Maersk), சிஎம்ஏ (CMA), சிஜிஎம் (CGM), ஹேப்பேக்-லாய்வ் (Hapag-Loyv) ஆகியவை இதில் கலந்துகொள்கின்றன.

விவாதங்கள் இல்லை செயல்களே பேசும்

மேலும் விஞ்ஞானிகள், தன்னார்வத்தொண்டு நிறு வனங்கள், சர்வதேச அமைப்புகளின் கோட்பாட்டாளர்கள் பங்கேற்கின்றனர். 30 பயிற்சிப் பட்டறைகள், கடலியல், மத்திய  தரைக்கடல், நீடித்த நிலையான வளர்ச்சிக்குரிய கப்பல் போக்குவரத்து, பசுமைத் துறைமுகங்கள், கடல்நீர் மட்ட  உயர்வினால் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் நகரங்களின் நிலைமை போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றிய கலந்துரை யாடல்கள் இம்மாநாட்டில் இடம்பெறுகிறது. 300 ஆய்வாளர்கள், தொழில் முனைவோர், ஐநா உட்பட சர்வதேச கடல்சார் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சி களை நடத்துகின்றனர். துருவப்பகுதிகள் தவிர உலகின் ஐந்து கண்டங்களில் இருந்தும் பிரதிநிதிகள் வருகின்றனர். சர்வதேச கடற்பரப்பு, நாடுகளின் கடல்சார் பொருளாதார மண்டலங்களுக்கு வெளியில் இருக்கும் பகுதிகளின் ஆளுமை  ஆகியவை மாநாட்டின் பெரிய சவால் என்று பசுமை அமைதி (Green Peace) கூறுகிறது.

கொட்டிக்கிடக்கும் உலோக வளம்

உலகின் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் சர்வதேச ஆழ்கடல் உயிர்ப் பன்மயத்தன்மை, சூழல் மண்டலங்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து செயல்திட்டங்கள் உருவாக்க முயற்சிக்கப்படும். 200 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள கடற்படுகையின் அடிப்பரப்பில் இருந்து நிக்கல், கோபால்ட் போன்ற அரிய உலோகங்களை சுரங்கம் தோண்டி எடுத்தல் தொடர்பாக முரண்பாடுகள் நிலவிவரும் நேரத்தில் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஆழ்கடல் சுரங்கத்தொழிலில் உலக நாடுகளுக்கு இடையில்  ஒரு உடன்பாடு ஏற்படவேண்டும் என்று சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) வலியுறுத்திவருகிறது. இதற்கு  எதிரான ஆழ்கடல் பாதுகாப்பு அமைப்பு (Deep Sea Conservation Coalition) கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று போராடிவருகிறது.

2030ஆம் ஆண்டிற்குள் உலகக் கடல்களில் 30 சத விகிதத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்க ஏற்கனவே  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது இதன் பரப்பு 7.7%. உலகின் 15% கடலோரப்பகுதிகள் மட்டுமே இன்று சூழலுக்கு நட்புடையவிதத்தில் உள்ளது. கடல் சூழலை காக்க உடனடியாக செயல்படவேண்டும் என்று அண்டார்டிக் தென் கடல் கூட்டமைப்பு (Antarctic Southern Ocean Coalition), சீ ஷெப்பர்டு Sea Sheperd), பசுமை அமைதி, ஆழ்கடலுக்கான சூழல் சமநீதி அமைப்பு (HighSeas Alliance environmental Justice foundation) உட்பட 19 சூழல் அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன. உலகக் கடல்களைக் காப்பாற்ற வலுவான, சட்டப்பூர்வ மான கட்டுப்பாடுகளுடன் கூடிய உடன்படிக்கை ஏற்பட வேண்டும் என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர். இது சொற்களுக்கும், சொற்பொழிவுகளுக்கும் உரிய நேரமில்லை. பிரச்சனைகளுக்கான தீர்வுகள் ஆட்சியாளர்களின் முன் உள்ளன. செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை களே இன்றைய தேவை. இந்நிலையில் கடல் சூழலைக் காக்க  கூடியிருக்கும் முதல் உலக உச்சிமாநாட்டிலேனும் நல்ல முடிவுகள் ஏற்படுமா?