tamilnadu

img

சங்க நாதம் ஓதியவன்

சங்க நாதம் ஓதியவன்

குடகு மலை உச்சியில் புறப்பட்டு   நுங்கு நுரையாய், காட்டாற்று வெள்ளமாய்   கரைபுரண்டு ஓடிவரும் காவேரி!  பரந்துவிரிந்த தஞ்சைத் தரணியை   குளிப்பாட்டி கழனியாக்கி—   செந்நெல்லும் செங்கரும்பும்   வாழையும் வெற்றிலையும்   பூத்துக் குலுங்குகிறது!  பண்ணை நிலத்தில்   இரவு பகல் பாராமல் உழைத்த மேனி   சுட்டெரிக்கும் வெப்பத்தால் கருமேக நிறமானது   கருத்த மேனி கோணியானது!  ஊருக்கு உழைத்தவன்   கால் வயிற்றுக் கஞ்சிக்கும்   மானத்துக்காக போத்தும் துணிக்கும்   காலம் முழுதும் காத்திருக்க வேண்டும்!  பண்ணையார் இசைவுக்கு   ஆடு மாடாய் அடிமையாக்கி கொண்ட   பண்ணையாள் கூட்டம் உறக்கமின்றி உழைத்திட ஒப்பந்தம்!  அதை மீறும் நொடியில் அரங்கேறும் சாணிப்பால் சவுக்கடி!   குடியிருப்பில் தீவைப்பு!   ஊரில் வாழத் தடைவிதிப்பு!   உறவுகளோடு பேசக் கட்டுப்பாடு!  உலகில் எங்கும் காணாத   அடிமைத்தனக் கொடுமைக்கு கொள்ளி வைக்க—   குடகு மலை சீமையிலிருந்து   கிழக்கே உதயமாகும் சூரியனாய்   கொடுமைகளைச் சுட்டெரிக்க   மார்க்சின் தத்துவச் சீலராய்   தஞ்சைத் தரணிக்கு வந்தான்   மாவீரன் பி.சீனிவாசராவ்!  ஒன்றுபட்ட தஞ்சைத் தரணியில்   கொத்தடிமைக் குடும்பங்களை   குத்தகை விவசாயிகளை   கண்டறியும் பணிகள் துவங்கி—  சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும்   காய்ச்சுப்போன மேனிகளைக் கண்டறிந்து   கரம் கோர்க்கக் கர்ஜித்தான்   தஞ்சைத் தரணியில்!  “கொடுமையும் அடிமையும்   உனக்கு நிரந்தரமில்லை—   விடுதலையே உனக்கு நிரந்தரம்!” என்று சங்கநாதம் ஊதென்றான்!  சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராய் ஜனக் கூட்டம் சங்கநாதம் ஊதிட   சங்கமாய் உயர்ந்தது!  சரித்திரம் படைக்கத்   தனக்கென கொடுமையைத் தட்டிக் கேட்கும்   சங்கக் கொடி—அது செங்கொடி!   தென்பரையில் ஓங்கிப் பறந்தது!  1947இல் வெள்ளையனிடமிருந்து நாடு விடுதலையானது   ஏழு ஆண்டுகள் கழித்து   பண்ணையடிமைக்கு முடிவு கட்ட   மன்னார்குடி பேச்சுவார்த்தை மகுடம் சூட்டியது!  சாணிப்பால் சவுக்கடியிலிருந்து   அடிமைகளுக்கு விடுதலை பிறந்தது!   மாவீரன் பி.சீனிவாசராவ் நடத்திய   வீரம் செறிந்த போராட்டமே அதற்குச் சான்று!  கல்லைக் கண்டால் கையெடுத்தோம்!   கற்பூரத்தைக் கொளுத்தி   கன்னத்தில் போட்டுக்கொண்டோம்!   படைத்தவனே எங்கள் பாடுகளை   கேட்க மாட்டாயா என்று   புலம்பி குழம்பி நின்றோம்!   ஏன் என்று கேட்க இறைவனைக் காணோம்!  கண்டோம்—   கழனியில் கர்ஜிக்கும் சிம்மக்குரலோனை!  பண்ணையடிமையிலிருந்து விடுதலை பெற்றுத்தந்து   கூனிக் கிடந்த கொத்தடிமைகளை நெஞ்சுயர்த்தி நிமிரச்செய்து அழகு பார்த்த அன்புத்தோழர்   பி.எஸ்.ஆர்க்கு   செவ்வணக்கம் செவ்வணக்கம்!