tamilnadu

img

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார நெருக்கடி: போராட்டமும் சட்டமும்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார நெருக்கடி: போராட்டமும் சட்டமும்

இந்தியாவில் முறைசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வேலையின்மை அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரான அரசின் நிலைப்பாடுகளால் நடுத்தர ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சாலையோர வியாபாரத்தை நாடும் மக்கள் பெருகி வருகின்றனர். தமிழகப் பெருநகரங்களில் மக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதில் இவர்களின் பங்கு முக்கியமானது. இவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் சாலையோர விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், அவர்களது பொருட்களை வீசி எறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. நாடு முழுவதும் இத்தகைய அடாவடி நடவடிக்கைகளால் துயரத்திற்கு உள்ளான சாலையோர விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, இந்தியத் தொழிற்சங்க மையம் சிஐடியு உடன் இணைத்து சங்கம் உருவாக்கப்பட்டு, செங்கொடியின் கீழ் போராட்டக் களத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இதன் விளைவாக, 2014-ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், முறைப்படுத்துதல் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை முதலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2015-ஆம் ஆண்டு தமிழக அரசும் இதற்கான துணை விதிகளை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இருப்பினும், காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல், சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளையே தொடர்ந்து எடுத்து வந்தன. இதற்கு எதிராக சிஐடியு தொடர்ந்து மக்கள் மத்தியிலும், நீதிமன்றங்களிலும் போராடி, சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்கப் பெரும் பங்காற்றியது. ஸ்வாநிதி திட்டமும்  சிஐடியு-வின் பங்களிப்பும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிப் பகுதிகளில் அடையாள அட்டை வழங்குதல், விற்பனைக் குழுமத்திற்கு (வெண்டிங் கமிட்டி) தேர்தல் நடத்துதல், சாலையோர விற்பனையாளர்களைத் தேர்வு செய்தல், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘ஸ்வாநிதி’ (SVA NIDHI) கடன் வழங்குதல் போன்ற திட்டங்கள் முறையாக அமுலாகாத நிலையில், மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் கடன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஸ்வாநிதி கடன் திட்டம் அமுலாக்கப்பட்டது. 2025 ஜனவரி 30 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.99 லட்சம் பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, நமது சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) விழிப்புடன் பணியாற்றி, மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்குகிறது. மாநாட்டு உறுதிப்பாடு எனவே, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள இம்மக்களைப் பாதுகாக்கவும், அவ்வப்போது நடக்கும் சட்ட மீறல்களைத் தடுக்கவும், முறையாக வெண்டிங் கமிட்டி தேர்தல் நடத்திடவும், சாலையோர வியாபாரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை முறையாக அமுல்படுத்தவும் மதுரையில் அக்டோபர் 25 அன்று நடைபெறும் முதல் சம்மேளன மாநில மாநாடு துணை நிற்க உறுதி பூணும். என்றும் உழைக்கும் மக்களின் கைகளில் ஜொலிக்கட்டும் செங்கொடி!