tamilnadu

img

மதச்சார்பு நாடு எனும் அபாயம் - பேரா.ராகேஷ் பட்டபியல்

தேச விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியத்தை இந்துத்துவா வாதிகள் இந்து தேசியத்தின் மூலம் அப்புறப்படுத்த தீவிரமாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அதி காரம் அவர்களின் கைகளில் இருப்பதால் தங்களின் ஒற்றைத்துவ கட்டமைப்பை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான வன் முறைகளை ஏவி விட்டுள்ளனர். இந்தியக் குடியரசு அதன் அரசியல் சட்ட பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்  ஆன்மா சிதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தேசத்தின் நிறுவ னங்கள் யாவும் உள்ளீடற்றவையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமு தாயமும், அரசியலும் வன்முறைமயமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மதச் சார்பற்ற தேசியம் நொறுங்கி கொண்டு இருக்கிறது. இது ஒரு மதச் சார்பான எதேச் சதிகார  அரசு நெருங்கி வருவதை உணர்த்துகிறது.

இந்திய தேசியமும் இந்துத்துவா தேசியமும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதி மக்களும் பங்கேற்றதன் மூலம் இந்தியா ஒரு தேசமாக உருவானது. இந்திய தேசியம் உருவானது. இந்திய தேசியம் மதச்சார்பின்மை, ஜனநாயகம்,  சமத்து வம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கை களாக ஏற்றுக்கொண்டது.ஆனால் ஆர்எஸ்எஸ் இந்த அரசியலமைப்பு மாதிரியை ஏற்றுக்கொண்டதில்லை. ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்தி யாவை இந்து தேசமாகவே பார்த்தனர். கொள்ளையர்களான அந்நியர்கள் நாட்டை வெற்றி கொண்டதற்கு பழி வாங்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டி ருந்தனர். நாடு விடுதலை பெற்ற பின்னரும் கிடைத்த ஜனநாயக வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டு தங்களது பிளவுவாத பாதையை தொடர்ந்தனர். தேசத்தந்தை காந்தி படுகொலையில் ஆர்எஸ்எஸ் பங்கு பற்றிய சந்தேகங்கள் இருந்த போதும் ஆர்எஸ்எஸ் தொடர்ச்சியாக செயல்பட முடிந்தது. மதச்சார்பின்மை,ஜன நாயகத்திற்கு எதிராக வதந்திகள் , கல வரங்கள்  மூலம் வகுப்புவாதத்தை வளர்த்த னர். ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே தனது அரசியல் துணை அமைப் பான பாஜகவுக்கு அரசையும், அரசு நிறுவனங்களையும் கைப்பற்ற பயிற்சி அளித்தது ஆர்எஸ்எஸ். 1977,1997, 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் இந்து தேசம் என்ற நஞ்சை மக்களுக்கு புகட்டினர்.இந்து தேசியம் என்ற மாதிரியை இயல்பான ஒன்றாக்க தீவிரமாக செயல்பட்டனர்.

வகுப்புவாத சிந்தனையை நிலைநிறுத்துவதற்கான ஆர்எஸ்எஸ் உத்திகள்

நீண்ட  விடுதலைப் போராட்டத்தின் விளைவான   இந்திய தேசியத்தால் பெரும் பகுதி இந்தியர்கள் குடியரசு உணர்வு கொண்டவர்களாக இருந்தனர். அவர்க ளின் மனங்களில் மதச்சார்பின்மை, குடியரசு உணர்வு, சோசலிசம், சர்வதேசி யம், அரசியலமைப்பு உணர்வுகள் வேரூன்றி இருந்தன. இது இந்துத்துவா கலாச்சாரவாதி களுக்கு  தடைக் கல்லாக இருந்தது. எனவே இந்து வகுப்புவாதிகள் இந்தியர்களின் நவீன சிந்தனைகளை  அழிக்க  வேண்டி யிருந்தது.  இந்தியர்களின் மனங்களில் இந்து வகுப்புவாத சித்தாந்தத்தை இயற்கை யானதாக இயல்பானதாக  மாற்றியமைக்க இரண்டு விதமான செயல்பாடுகளை மேற்கொண்டனர். ஒரு பக்கம் இந்தியாவின் நவீன ஜன நாயக, மதச்சார்பின்மை தேசியத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது: சிறுமைப் படுத்துவது, மறைப்பதாகும். இரண்டாவதாக வகுப்புவாத சித்தாந் தத்தை  நிறுவனப்படுத்துதல் மூலம் இயல் பானதாக மாற்றுவது. இவை  ஆர்எஸ்எஸ் ஸின் இரண்டு செயல் திட்டங்கள். முதலாவது திட்டத்திற்கான வழிமுறை களாக அரசு நிறுவனங்கள் அதன் நடை முறைகள், மதச்சார்பின்மை ஜனநாயகம், உலகளாவிய நவீன கருத்துக்கள்  மீது ஒட்டுமொத்த தாக்குதல் தொடுப்பது-இரண்டாவது திட்டத்திற்கு வன்முறையை பயன்படுத்துவது ஆர்எஸ்எஸ்சின் வழி முறையாக இருந்தன. இந்து வகுப்புவாதிகள் விடுதலை இயக்க தலைமையை தொடர்ச்சியாக நிந்தனை செய்துவந்தனர். அது காந்தியை நாதுராம் கோட்சே படுகொலை செய்ததில் முடிந்தது. காந்தியை படுகொலை செய்த தோடு அவர்கள் திருப்தி அடையவில்லை.தேசத் தந்தையை படுகொலை செய்த தையும் வகுப்புவாதிகள் பெருமைப் படுத்தினர்.

பாஜக   முன்னிறுத்தும் காந்தி

இன்று மக்களின் மனங்களில் இடம் பெற்றுள்ள காந்தியை முழுவதுமாக மறக் கடிக்கச் செய்ய  முயற்சி செய்யப்படுகிறது. காந்தியுடன் செயல்பட்ட தலைவர்களை காந்தியுடன் இருந்து பிரிக்கவும், காந்தி யின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கும் வகுப்புவாதிகள் செயல்படுகின்றனர். காந்தியை அரசியலற்ற ஆளுமையாக, அவரது இறுதிக்காலத்தில் அவரது சீடர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவராக அரசியல் வாழ்க்கையில் முக்கியத்துவம் இழந்தவராக காந்தி சித்தரிக்கப்படுகிறார். பாஜக அரசின் முழு சுகாதார இயக்கத் திட்டத்தில் கண்ணாடி அணிந்த காந்தியை சின்னமாக காட்டுவது இந்தப் பின்னணி யில்தான். இனி வருங்கால தலைமுறையின ருக்கு காந்தி  காலனிய எதிர்ப்பு வீரராக, சுதந்திர இயக்கத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவராக, காங்கிரஸ் கட்சியை 1920 இல் இருந்து30 ஆண்டுகாலம் வழிநடத்தி யவராக அறியப்படமாட்டார். மாறாக, அவர் ஒரு அப்புராணி மனிதராக, மத நம்பிக்கை கொண்டவராக காட்டப்படு

சுதந்திரத் தியாகிகளின் மீதான அவதூறு

 பொதுவெளியில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறு பரப்பப்படுகிறது. இதில் அதிக மாக நேருதான் கொச்சைப்படுத்தப் படுகிறார். அவரது தனிப்பட்ட சொந்த வாழ்க்கை, அரசியல் தலைமைத்துவம், சர்வதேச அரசியல் செயல்பாடுகள் ஆகிய அனைத்தின்மீதும் இந்து வகுப்புவாத படையினர் அவதூறு, பொய்களை பரப்பு கின்றனர். நேரு மதச்சார்பற்ற நெறிமுறை களுக்கு முக்கியத்துவம் அளித்தார் என்பதுதான் வகுப்புவாதிகளுக்கு அவர் மீதான கோபம். 1947 இல் நாடு விடுதலை பெற்றதன் மூலம் தாங்கள் சுதந்திர உரிமை பெற்றோம் என்பதாக அல்லாமல் காங்கிரஸ்  பிரிட்டி ஷாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தாங்கள் பலிகடா ஆக்கப்பட்டு  விட்டதாக மக்கள் உணர வைக்கப்படுகின்றனர். தேசப் பிரிவினையை ஏற்றுக்கொண்டதன் மூலம் நேருவும் அவரது தோழர்களும் பிரிட்டிஷாரின் ஏஜெண்டுகளாக சித்தரிக் கப்படுகின்றனர். எதிரிகள் (முஸ்லிம்கள்) தங்கள் மக்கள்தொகை எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டு எதிர்காலத்தில் இன்னுமொரு தேசப் பிரிவினை கோரி அச் சுறுத்தும் அபாயத்துக்கு நேரு வழி வகுத்தார் என்று இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் எண்ண வைக்கப்பட்டுள்ளனர். தேசப் பிரிவினையை அனுமதித்ததன் மூலம் இந்துக்கள் பலவீனப் படுத்தப் பட்டு சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தை சிறுமைப்படுத்திவிட்டார் என்ற பிரச்சாரம் வகுப்புவாதிகளுக்கு பெரும் பலன் அளித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் நாளை தேசப் பிரிவினை பயங்கர நினைவு தினமாக மோடி அறி வித்ததில் இருந்து இந்த உணர்வு நிரந்தர மாக்கப்படுவதை அறியலாம். மேலும் விடு தலைப் போர்  என்பதையே ஒரு சிறிய ஓரங்க நாடகம் போன்று சித்தரிக்கின்றனர். விடுதலைப் போராட்ட இயக்கத்தைஒரு சாதாரண விவகாரமாக, வெறும் அரசியல் தந்திர விளையாட்டாக ,

 இன்றைய தேர்தல் அரசியல் போன்றே சிறுமைப்படுத்துகிறது. காந்தி- நேருக்கு எதிராக நேதாஜி யையும், நேருவுக்கு எதிராக பட்டேலையும் அவர்கள் நிறுத்துவது அரசியல் தந்திர விளையாட்டின் ஒரு பகுதிதான். விடு தலைப் போராட்ட தலைவர்களை நேர்மை யற்ற, தைரியமில்லாத, பலவீனமான, உள்ளீடற்ற மனிதர்களாக காட்டப்படு கிறது. வரலாற்றில் இங்கொன்றும் அங் கொன்றுமாக சிலரை எடுத்துக்கொண்டு (சில ராஜபுத்திர மன்னர்கள் போன்று)அவர்களின் தியாகத்திற்கு காந்தி நேரு உள்ளிட்ட தலைவர்கள் ஈடாக மாட்டார்கள் என்று சிறுமைப்படுத்தப்படுகின்றனர். நாட்டின் சுதந்திர 75ஆவது ஆண்டு விழாவை இவ்வாறுதான் ஆசாதி அம்ரித் மகோத்சவ் என்று விசித்திரமாக பெயர் சூட்டியுள்ளது.  விடுதலைப் போரில் ஈடுபட்ட பல அரசியல் கட்சிகள், அதன் தலைவர்க ளின் பங்களிப்பை நீர்த்துப்போகச் செய்து கொண்டே இன்னொரு பக்கம்   விடுதலைப் போரில் எதிர்மறை பங்கு வகித்த சாவர்க்கர், கோட்சே போன்ற முக்கியத்துவமற்ற தலை வர்களை விடுதலை இயக்கத்தில் பெரிதும் பங்கேற்றதாக தொடர்ச்சியாக பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களின் பொதுப் புத்தியை கட்டமைக்கின்றனர். இப்படிப் பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சாவர்க்கர், கோட்சே மீதான களங்கத்தை  சுத்திகரிப்பு செய்கின்றனர்.

ஆர்எஸ்எஸ்  ராணுவமயக் கொள்கை

ஆர்எஸ்எஸ்ஸின் மையமான கொள்கை சமுதாயத்தை ராணுவ மய மாக்குதலாகும். அது மக்களுக்கு கட்டாய ராணுவ சேவையை வலியுறுத்துகிறது. இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு என்பது அதன் கோட்பாடாகும். ஆர்எஸ்எஸ்  ராணு வக் கொள்கைக்கு ஏற்ப வலிமை சேர்க்கும் விதமாக கட்டுக் கதைகளை கொண்ட வர லாறு உருவாக்கப்படுகிறது. மேலோட்ட மான சம்பந்தமில்லாத பல்வேறு விசயங்க ளை தேச பக்தியுடன் ஒப்பிட்டு மக்களின் மனங்கள் இராணுவ மயமாக்கப்படுகிறது. இந்தியாவின் இடைக்கால வரலாற்றில் இந்தியாவானது ஆப்கானியர்கள், துருக்கி யர்கள், முகலாயர்கள் போன்ற  அந்நியர்க ளிடம் நாடு தோற்றது. அந்த தோல்விக்கு பழி வாங்க வேண்டும் என்று கூறுவது இந்தியா ராணுவமயமாக வேண்டும் என்ப தற்காகத்தான். இதற்காக ராணுவம், போலீஸ் போன்ற அரசுத்துறை ஊழியர்களின் சாதனையை யும் ஏதோ இந்துத்துவா தேசியத்தின் சாத னையாக  பிரச்சாரம்  செய்யப்படுகிறது.மக்களின் பொதுப் புத்தியில் விடுதலைப் போராட்டத் தியாகிகளை விட சில ராஜாக்கள் தற்போதைய ராணுவத்தினர், காவல்துறையினர் மாவீரர்களாக காட்டப் படுகின்றனர். இந்துத்துவ தேசியத்தின் புதிய சொற் களாக சதாசர்வகாலமும் எதிரிகள், போர், வெற்றி,தோல்வி,தாக்குதல் போன்ற கருத்துக்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. இந்து வகுப்புவாதிகள் விடு தலைப்போரில் பங்கேற்காதது குறித்து மக்கள் கேள்வி கேட்டுவிடாமல் இவ்வாறு திசை திருப்பப்பட்டுக்கொண்டே இருக் கின்றனர்.

வகுப்புவாத சிந்தனைகளை இயல்பானதாக மாற்றுதல்

சுதந்திரப் போராட்டத்தின் போது தீவிர தேசியவாதம் பேசுவது ஏகாதிபத்திய ஆசை களுக்கு உள்ளாகலாம் என்பதை சுதந்தி ரத்திற்காகப் போராடியவர்கள் உணர்ந்தி ருந்தனர். 18- 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியச் சூழலில் உருவான தீவிர தேசியம் என்பதே காலனித்துவத்தின் நீட்சி தான் என்பதை அறிந்திருந்தனர். எனவே பல்வேறு பகுதிகள், பிராந்தியங்கள் ,மத  இன, மொழி வேறுபாடு கொண்ட நாடானது பெரும்பான்மை ஒற்றைத்துவத்தை அடிப் படையாகக்கொண்ட நாடாக மாறுவதற்கு வழி வகுத்து விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருந்தனர். இதற்கான உத்தரவாதம் தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். 1947 இல் நாடு விடுதலை பெற்றதும் சுதந்திர இந்திய அரசு மிகவும் கடின மான முயற்சி மேற்கொண்டு தேசப் பிரி வினையின் பின்விளைவாக உருவான வன்முறைச் சூழலில் நாடு இந்து தேசிய வாதத்திற்கு  பலியாகி விடக்கூடாது என்று விழிப்புடன் செயல்பட்டனர். இதற்கு நாட்டின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்ட மாண்புகள் இணைப்பு சக்தியாக இருந்தது. இவ்வாறுதான் நாடு மதச்சார் பற்ற தேசமானது.

ஆனாலும்கூட இந்து வகுப்புவாதிகளின் வகுப்புவாத அணுகு முறை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீடிக்கவே செய்தது. கூடவே முஸ்லீம் வகுப்புவாதமும் நீடித்தது.இருப்பினும் இந்து வகுப்புவாதிகள் தான் இந்தியாவை மதச்சார்பான நாடாக்கும் கொள்கையுடன் செயல்பட்டனர். இந்து வகுப்புவாதிகள் மதச்சார் பின்மை எதிர்ப்பு மற்றும் சோசலிச எதிர்ப்பில் தங்களை முன்னிறுத்திக் கொண்டனர். இதன் மூலம் சுதந்திரா கட்சி (சோசலிச எதிர்ப்பு மட்டும்) போன்றவர்க ளும் நண்பர்கள் ஆனார்கள். சோசலிசம் மீதுநேரு , இந்திராகாந்தி மீது ஒவ்வாமை கொண்ட பிரிவினருக்கு வகுப்பு வாதிகளின் சிந்தனை ஒத்துப்  போயிற்று.இருப்பினும் வரலாற்றறிஞர் பிபன் சந்திரா கூறுவதுபோல   ஆர்எஸ்எஸ் சின் மையமான கொள்கை முஸ்லீம் எதிர்ப்பாகவே நீடித்தது. இன்று வகுப்புவாதிகள் இந்தியாவை இந்து நாடாக வரையறுப்பதில் மும்முர மாக ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முயற்சி களை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள னர். இந்த வன்முறையில் பல்வேறு மத மொழி இன பண்பாட்டுப் பிரிவினரை பாது காப்பதற்கு உரிய மதச்சார்பின்மை மரபு அழிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் பன்மைத்துவத்திற்கு எதிரான இந்துத்துவாவாதிகளின் ஒடுக்குமுறை

விடுதலைப் போராட்ட வளர்ச்சிப் போக்கில் பல்வேறு அறிஞர்களும் அரசியல் போக்குகளும் உருவாகின. காந்தியின் சுயராஜ்யம், நேருவின் சோசலிசம், மிகவும் தீவிரமான அரசியல் மாற்றங்கள் சீர்திருத்தங்களை கோரிய கம்யூனிஸ்டு கள், இந்துயிசத்திலிருந்து  தீவிரமாக மாறுபட்ட அம்பேத்கர் , சமத்துவத்திற்கான தீவிர வேட்கை கொண்ட பெரியார் என்று பல்வேறு அரசியல் கொள்கையினரும் உருவானார்கள். இந்திய தேசியம் பல்வேறு அரசியல் திட்டங்களுக்கானகருத்தோட்டங்களின் களஞ்சியத்தை உருவாக்கியது. இது பன்முகத் தன்மை மிக்க அரசியல் கட்சிகளின் அரசியல் நடவ டிக்கைகளை சாத்தியமாக்கியது. இன்று அந்த அரசியல் பன்மைத்து வத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.நேர் மறையான அரசியல் திட்டம்  ஏதுமற்ற இந்து வகுப்புவாதக் கும்பல்கள் இந்து வகுப்பு வாதத்தில் இருந்து வேறுபடும் அனைத்து சித்தாந்தங்களையும் இந்திய அரசியலில் இருந்து விலக்கம் செய்ய முயற்சி செய்கிறது. தங்களது சித்தாந்தத்திற்கு எதிரான பல்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்களை தேசத்திற்கும், அரசுக்கும் எதிரானவர்களாக நிறுத்தி யுள்ளது ஆர்எஸ்எஸ். இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, பிரதமரை விமர்சிக்கும் வெறும் ஒரு முகநூல் பதிவு கூட தேச விரோதமாக குற்றம்சாட்டப்படுகிறது.  அரசின் அரக்கத் தனமான வலிமையான அதிகாரத்துவ கண்காணிப்பின் கீழ் சமூக விலக்கம் இயல்பானதாக மாற்றப்பட்டுள்ளது. இன்று  வகுப்புவாதிகளின் ஆட்சி ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையோ  அல்லது சமுதாயம் முழுவதையுமோ அகற்றிவிடும் முயற்சியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளது. பட்டப்பகலில் முஸ்லிம்களை கொடூரமாக அடித்துக் கொலை செய்வது போன்ற வன்முறைகள், என்கவுண்ட்டர்கள் மூலம் அரசிற்கு எதிராக இருக்கும் எவரையும் இல்லாமல் செய்து விடுவது மிகவும் இயல்பான விசயமாக மாற்றப் பட்டுள்ளது. 1970 களில் ஜன சங்கம் முஸ்லிம்களை இந்தியமயப்படுத்துவோம் என்ற பிரச் சாரத்தை துவக்கியது. அப்போது இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வன்மையாக  கண்டித் தன. தீவிரவாதத்திற்கு எதிரான உலக ளாவிய போர் என்பது ஆர்எஸ்எஸ்சின் இஸ்லாமியோஃபோபியாவுக்கு(இஸ்லாமியர் மீதானவெறுப்புணர்வு) கருவி யாகி உள்ளது. இதுபோன்ற சித்தரிப்புக ளினால் பெரும்பகுதி இந்திய மக்களின் மனங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான  வெறுப்புணர்வு பெருமளவு வளர்ந்துள் ளது.

முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற வெறியுணர்வு

முத்தலாக் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற தாக்குதல்களால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாய மக்களும் சமுதாய விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்து வகுப்புவாதச் சிந்தனைகள் இயல் பான அறிவாக மாறியுள்ளது.  முஸ்லிம்கள்  விலக்கிவைக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தொடர்ச்சியாக ஏதோ ஒரு அவசரநிலையை எதிர் கொள்வது போலவும் , எதிரிகள், தீவிரவாதிகளின் தாக்குதல், உள்நாட்டு பாதுகாப்பு, என்று அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்து வது போன்ற சித்தரிப்புகள் ஏற்படுத்தப் படுகின்றன. தேர்தல்கள்கூட யுத்தம் போன்று சித்தரிக்கப்படுகிறது.

இவைகள் எல்லாவற்றிலும் முஸ்லீம் கள் சந்தேகத்துக்குரியவர்களாகவும்  அகற்றப்பட வேண்டியவர்களாகவும்  காட்டப்படுகின்றனர். இந்த வகுப்புவாத செயல்பாடுகளை  அரசு விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. வரலாறு நமக்கு போதிப்பது என்னவெனில் இதுபோன்ற செயல்பாடுகள்  ஒட்டுமொத்த இன அழித்தொழிப்பு பாதகச் செயல்கள் நடத்தப்படுவதற்கான  சூழலுக்கு கொண்டு செல்லும் என்பதைத்தான். அரசு சாரா கூடுதல் காவல்துறை போன்ற செயல்பாடுகள் (லவ் ஜிகாத் ஒழிப்பு படை, பசு பாதுகாப்பு படை, இதுவல்லாத இந்துத்துவா வெறி கும்பல்கள்)  ஒட்டு மொத்த  இன அழித்தொழிப்பு அபாயங்களு க்கு இட்டுச்செல்லும். நாடு இது போன்ற ஆபத்தான நிலையில் இருக்கும்போது நமது தலையீட்டிற்கான நிகழ்ச்சி நிரல் எதுவாக இருக்க முடியும். வகுப்புவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகளை எதிர்கொள்வதற்கான நிகழ்ச்சி நிரலை வடிவமைக்க வேண்டி யுள்ளது. தொடுவான தூரத்தில்தான் மதச்சார்பு அரசு எனும் பிசாசு வட்டமிட்டுக்  கொண்டிருக்கிறது. அதை முறியடிப்ப தற்கான விஷமுறி  மருந்தை தேச விடுதலை போராட்ட வரலாறு தான் வழங்குகிறது. அதன் படிப்பினைகள் வழி காட்டுகிறது. தற்போதைய சூழ்நிலையில் உள்ள ஒரே ஒரு நம்பிக்கை சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடையே மீண்டும் நிலை நிறுத்துவதற்கான உறுதி மட்டுமே.

கட்டுரையாளர்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,  பிரண்ட்லைன்,ஜன.28,2022,  தமிழில்: ம.கதிரேசன்

;