தமுஎகச பொன் விழா ஆண்டு நிறைவு: திருவாரூரில் கலை இலக்கிய இரவு
திருவாரூர், ஆக.16 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவாரூர் கிளையின் சார்பாக பொன்விழா ஆண்டு நிறைவு கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூர் கீழவீதியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை ஏற்றார். கிளைச் செயலாளர் பொன். மகாலிங்கம் வரவேற்றார். மாநிலக் குழு நிர்வாகி எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன் துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் மு.சௌந்தரராஜன், செயலாளர் முனைவர் ஜீ.வெங்கடேசன், பொருளாளர் எம்.செல்வராஜ், விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.சுந்தர மூர்த்தி வாழ்த்துரை ஆற்றினர். திரைப்பட இயக்குநர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் உரையாற்றினர். கங்கை கருங்குயில் தப்பாட்டக் குழு வினரின் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்ட நிகழ்ச்சி, பழவனக்குடி நண்பர்கள் கோலாட்ட குழுவின் நிகழ்ச்சியும், அம்பை பூபதியின் கரகாட்ட நிகழ்ச்சியும், லிம்போ கேசவனின் மனித குரங்கு நடனமும் நடைபெற்றது. மக்கள் இசை பாடகர் முனைவர் மதுரை சந்திரனுடன் இணைந்து, கிராமிய நாட்டுப்புற பாடல்களை ஆரூர்.பக்கிரி தாஸ், ஆலங்குடி மோகனா ஆகியோர் பாடினர். கவிஞர் வல்லம் தாஜ்பால் தலைமையில் கவிஞர் மா.சண்முகம், கவிஞர் வரத.வசந்தராஜன் ஆகியோரின் கவிதை கவிச்சரம் நடை பெற்றது. தமுஎகச மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். கிளை பொருளாளர் நா.அசோக்ராஜ் நன்றி கூறினார். முன்னதாக மாலையில், திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து மத நல்லிணக்க பேரணியை திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். என்.அனிபா பெரியார் சிலைக்கும், தமிழ்த்தென்றல் திருவிக சிலைக்கு ஜி.சுந்தரமூர்த்தியும் மாலை அணி வித்தனர்.