தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனம் உதயமானது!
மதுரை, அக். 25 - தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் (சிஐடியு) முதல் மாநில மாநாடு, மதுரையில் தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கில் (நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹால்) சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்- சி.பி. ஜெயசீலன் தலைமை வகிக்க - எஸ். செல்வி கொடியேற்றி வைத்தார். பி. பாலன் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். எஸ். சந்தியாகு வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாநில உதவி தலைவர் இரா. தெய்வராஜ் துவக்கவுரையாற்றினார். மாநில கன்வீனர் பி. கருப்பையன் வேலை அறிக்கை மற்றும் ஸ்தாபன அறிக்கையை முன்மொழிந்தார். மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், சிஐடியு மாநில உதவித் தலைவர் சி. திருவேட்டை, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில உதவி பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் சிறப்புரையாற்றினார். மதுரை நகர் சாலையோர மற்றும் மார்க்கெட் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் என். செல்வம் நன்றி கூறினார்.
வலுக்கட்டாயமாக அகற்றுவது கூடாது!
சாலையோர வியாபாரிகளை சட்டத்திற்கு விரோதமாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சாலையோர வியாபாரிகளுக்கு பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் வழங்கும் கடன் தொகையை தொடர்ந்து வழங்குவதோடு, வட்டியில்லாக் கடனாக வழங்க வேண்டும்.
தட்டுக் கடைகளை அனுமதிக்க வேண்டும்!
சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கிட வேண்டும்; இராமநாதபுரம் மாவட்டத்தில் பொது வாரச்சந்தை குத்தகைதாரர்களின் அராஜகம் - ஒடுக்குமுறைகளைத் தடுத்து வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும்; சந்தையில் தரைக்கடையை தனிநபருக்கு குத்தகை விடும் முறை நிறுத்தப்பட வேண்டும்; புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் தட்டு வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பதை கைவிட வேண்டும்; தட்டு வியாபாரிகளைப் பேருந்து பகுதிகளில் அனுமதிக்க வேண்டும்; வடகிழக்கு பருவமழை காலங்களான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கு சாலையோர வியாபாரிகளுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில், சாலையோர வியாபாரிகள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சி. திரு வேட்டை, பொதுச்செயலாளராக பி. கருப்பை யன், பொருளாளராக எஸ். செல்வி மற்றும் 8 துணைத் தலைவர்கள் 8 துணைச் செயலா ளர்கள் உட்பட 19 நிர்வாகிகள் 37 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
