tamilnadu

img

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம் “மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்“மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில்  அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

பெரம்பலூர். ஆக. 28-  உயர்கல்வித்துறை சார்பில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் “மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சி வியாழக்கிழமை பெரம்பலூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் கலந்து கொண்டு “கல்வி சிறந்த தமிழ்நாடு’’ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு மற்றும் உயர் கல்வித் துறை மாணவர்களுக்கு என்ன கருத்தினை சொல்ல வருகிறது என்பதை கல்லூரி மாணவர்கள் அனைவரும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மொழியும் எந்த ஒரு இனமும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக இருக்கிறது என்றால் அந்த வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  அப்படியான ஒரு மொழி தான் தமிழ் மொழி. பல்வேறு எதிர்ப்புகளை மீறி, ஒரு மூத்த மொழியாகவும், முதல் மொழியாகவும் தமிழ் மொழி திகழ்ந்து வருகிறது. தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அறிவித்த திட்டம் தான் மாபெரும் தமிழ் கனவு திட்டம். புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், மாபெரும் தமிழ் கனவு போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும் உயர்கல்வி பயின்று வருவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.  அதற்காக பாடுபட்ட நிறுவனங்கள், ஒத்துழைத்த பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என அனைவரின் உழைப்பில்தான் உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை இன்று நாம் பெற்றுள்ளோம் என தெரிவித்தார். பின்னர், தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும், சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களைக் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும்  அமைச்சர் வழங்கினார்.  அதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், கல்லூரிக்கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த 17 அரங்குகளை, உயர் கல்வித் துறை அமைச்சர் பார்வையிட்டார்.  பின்னர், அரசு திட்டங்கள் குறித்து இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயர் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி மற்றும் தமிழ் பெருமிதம் என்ற தலைப்பிலான இரண்டு புத்தகங்களையும் வழங்கினார்.