உழவர் சந்தை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டும் திருவாரூர் ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு
திருவாரூர், செப். 18- விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக, கடந்த 2000 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி, தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உழவர் சந்தைகள் துவக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது உழவர் சந்தைகள் பயன்படுத்த முடியாத நிலையில் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு முன்னுதாரணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தற்போதும் இயங்கும் உழவர் சந்தையால், மன்னார்குடி உழவர் சந்தை வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பெரிய அளவில் பயன்பெற்று வருகின்றனர். இந்த உழவர் சந்தையானது மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டு, பணிகள் முடிவடைந்து திறக்கப்படும் தருவாயில் உள்ளது. இந்த புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்காக மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையானது தற்போது மாற்று இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் உழவர் சந்தை இயங்குவதற்கான இடம் ஒதுக்கப்படாமல், பேருந்து நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக உழவர் சந்தைக்கான இடத்தை புதிய பேருந்து நிலையம் அருகிலேயே வழங்க வேண்டும் என வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமையில், மன்னார்குடி நகரச் செயலாளர் ஜி.முத்துக்கிருஷ்ணன், நகரத் தலைவர் எஸ்.ஏகாம்பரம், உழவர் சந்தை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜி.முருகானந்தம், பி.வீரமணி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, இதுகுறித்து மனு அளித்தனர்.