tamilnadu

img

பட்டையைக் கிளப்பும் தமிழக செஸ் படை

பட்டையைக் கிளப்பும் தமிழக செஸ் படை

சென்னையை “சதுரங்கத்தின் தலைநகரம்” என்று அழைப்பது வெறும் பெருமைப் பேச்சு அல்ல. இது ஒரு உண்மையான வரலாற்றுச் சான்று. உலகச்செஸ் மேடையில் தமிழக வீரர்கள் தொடர்ச்சியாக வரலாறு படைத்து வருகின்றனர்.  சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடை பெற்ற கிராண்ட் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் மூன்றாவது, தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக உரு வெடுத்த வைஷாலிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சாதனை தமிழ்நாடு செஸ் உலகில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான மற்றொரு பொன்னான சான்றாக விளங்குகிறது. வரலாற்றின் அடித்தளம் தமிழ்நாட்டிற்கும் சதுரங்கத்துக்கும் உள்ள தொடர்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் மனுவேல் ஆரோன் தமிழ்நாட்டின் மகன். நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி சென்னையின் புதல்வி. இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் நடுவர் வெங்கடாச்சலம் காமேஸ்வரன் சென்னையின் மதிப்பு மிக்க மூத்த குடிமகன். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் “மெட்ராஸ் புலி”. ஆனந்தின் சாதனைகள் இந்திய சதுரங்கத்திற்கு புதிய தளத்தை அமைத்தன. அவருக்கு பிறகு, தமி ழகத்தில் சதுரங்கத்தை பிரபலப்படுத்தி யவர் முன்னாள் தேசிய சாம்பியன் ஆர்.பி. ரமேஷ். தற்போது பல இளம் சதுரங்க வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் உல கத்தில் தலைநிமிரச் செய்கிறார். டி.ஹரி கிருஷ்ணா, அடிபன் பாஸ்கரன், ஆர்யன் சோப்பிரா ஆகியோர் சாதித்துள்ள வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் தற்போது உள்ள 74 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது நமது பொறுமையின் அளவுகோலாக அமைகிறது. புரட்சியின் பிறப்பிடம் 1972ஆம் ஆண்டு சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நிறுவப்பட்ட ‘டால்’ செஸ் கிளப்பில் பயிற்சி பெறத் தொடங்கிய ஒரு சிறுவன்தான், இந்தி யாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் செஸ் புரட்சிக்கு வித்திட்டவர் விஸ்வநாதன் ஆனந்த். தனது மின்னல் வேகத்தாலும், அபாரமான வியூகத்தாலும் எதிராளி களை வியக்க வைத்தார். ரஷ்யர்கள் ஆதிக்கம் செலுத்திய செஸ் அரங்கில் புயலாய் பிரவேசித்தார் ஆனந்த். முதல் முறையாக உலக சாம்பியன் மகுடம் சூடி  வந்தபோது 2000ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் இருந்து வீடு வரை சாரட் வண்டியில் அழைத்து சென்று சிலா கித்துக் கொண்டாடியது சென்னை. அந்த கொண்டாட்டம் இன்றும் தமிழர்களின் நெஞ்சில் பசுமையாக நிற்கிறது. கிராண்ட் மாஸ்டர் தொழிற்சாலை ஆனந்தைப் பார்த்து உத்வேகம் பெற்ற பலரும் செஸ் பலகை முன் அமரத்  தொடங்கினர். இப்போது, சென்னையை கிராண்ட்மாஸ்டர் தொழிற்சாலை என்றே வர்ணிக்கத் தொடங்கியுள்ளனர். டி.குகேஷ், சதுரங்க வரலாற்றில் 2ஆவது இளம் கிராண்ட் மாஸ்டர். 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அப்போது உலகிலேயே இளம் கிராண்ட்  மாஸ்டராக திகழ்ந்த உக்ரைனின் செர்ஜி கர்ஜாகினின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பை வெறும் 17 நாட்களில் தவறவிட்டார் குகேஷ். ஆனால் அவரது வெற்றி பொன்னெழுத்துக்களில் பதிவாகியுள்ளது. அடுத்து, பளிச்சென்று ஞாப கத்துக்கு வருபவர் பிரக்ஞானந்தா. செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (10), சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றவர் பிராக்  என்று அழைக்கப்படும் பிரக்ஞானந்தா. தற்போது, உலகின் 5ஆவது இளம்  கிராண்ட் மாஸ்டர். நடப்பு  உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இருமுறை மண்டி யிட வைத்து மலைப்பூட்டினார். கார்ல்ச னை முதல் முறை வென்றபோது, “பிராக்... 16 வயதில் எவ்வளவு பெரிய வீரரை நீங்கள் வீழ்த்தி இருக்கிறீர்கள்! ஒட்டுமொத்த இந்தி யாவையே நீங்கள் பெருமையடையச் செய்துவிட்டீர்கள்” என்று சிலிர்த்துப் போய் பாராட்டினார் கிரிக்கெட் கிங்  சச்சின். செஸ்ஸின் பெருமை - வைஷாலி தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரான வைஷாலி, பிரக்ஞானந்தாவின் சகோதரி. ஒரே குடும்பத்தில் அக்கா - தம்பி இருவரும் தொடர்ந்து உலக அளவில் சாதனை படைத்து வருவது மேலும் மேலும் பெருமை சேர்த்து வருகிறது. அர்ஜுனா விருது பெற்ற வைஷாலி, இப்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற தொட ரில் சாம்பியன் பட்டம் வென்று 2026 உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். செஸ் கலாச்சாரமும் அரசு ஆதரவும் தமிழ்நாட்டின் சிறு, பெரு நகரங் களில் மூலை முடுக்குகளில் செஸ் பயிற்சி நிலையங்கள் காணப்படுகின்றன. சர்வதேச அனுபவம் பெற்ற பயிற்சியா ளர்கள் அடுத்தடுத்து வீரர்களை  உருவாக்கிக் கொண்டி ருக்கின்றனர். முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் ஆத ரவுடன் செஸ் வளர்ச்சி தொடர்கிறது. பிரகாசமான எதிர்காலம் ஆனந்த் கூறுவது போல், அவ ருக்கு முன்பே செஸ் கலாச்சாரம் தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்தது. ஒரு  காலத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து என்று முன்னணி நாடுகள் ஆதிக்கம் செலுத்திய செஸ் உலகில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந்த் கடிவாளம் போட்டார்.  இன்றைய இளம் தலைமுறையினரின் ஒவ்வொரு நகர்வும் தமிழ்நாட்டின் பெரு மையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது. சொந்த மண்ணில் தமிழக செஸ் படை மேலும் பட்டையைக் கிளப்பும்  என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு மட்டு மல்ல, அது ஒரு உறுதியான நம்பிக்கை யாகவும் மாறியுள்ளது. வைஷாலியின் வெற்றி அந்த நம்பிக்கையின் அடுத்த அத்தியாயமாக விளங்குகிறது. - சி.ஸ்ரீராமுலு