tamilnadu

img

மே.வங்கம் பாலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதி சிபிஎம் வேட்பாளராக சைரா ஷா ஹலீம் போட்டி

கொல்கத்தா, மார்ச் 18- மேற்கு வங்க மாநிலம் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சைரா ஷா ஹலீம் போட்டியிட உள்ளார். குடியுரிமைப் பதிவேடுக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற சமூக ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் என சைரா குறிப்பிடத்தக்கவர். சிபிஎம் தலைவரும் பிரபல மருத்துவருமான டாக்டர் பவுத் ஹலிம் இவரது கணவர். டாக்டர் பவுத் ஹலிம் 2021இல் இங்கிருந்து சட்டப் பேரவைக்கு போட்டியிட்டார். பவுத் ஹலிமின் தந்தை ஹாசிம் அப்துல் ஹலீம், இடதுமுன்னணி ஆட்சியில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அமைச்சர் சுப்ரதா முகர்ஜி மறைவைத் தொடர்ந்து பாலிகஞ்ச் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திரிணாமுல் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாடகருமான பாபுல் சுப்ரியோ போட்டியிடுகிறார். இரண்டு முறை பாஜக எம்பியாக இருந்த சுப்ரியோ, கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.