tamilnadu

img

மத அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்த பல்கலை. துணைவேந்தரை நீக்க வேண்டும்... உயர்கல்வி பாதுகாப்புக்குழு வலியுறுத்தல்

மதுரை
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பின் நிர்ப்பந்தத்தால் பாடநூலை தன்னிச்சையாக நீக்கிய துணைவேந்தரை அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 
தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் இரா.முரளி  வெளியிட்டுள்ள அறிக்கை  :-

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்திபரிஷத் (ஏபிவிபி) அமைப்பு கொடுத்த அழுத்தத்தால் ஒரு பாட நூலை நீக்கியுள்ளது.  அதுமட்டுமின்றி, அதற்குப் பதிலாக வேறு ஒரு புத்தகத்தை தன்னிச்சையாக  அறிமுகப்படுத்தவும் செய்துள்ளது. பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிக்கும் மாணவர்களுக்கு இம்மாதிரி நூல்களின் அறிமுகம் என்பது நாட்டின் பல சமூக அரசியல் பிரச்சனைகளை புரிய வைக்கும்.

இந்த நூலின் உள்ளடக்கம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக இருக்கிறது என்பதால் இந்த நூலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது துணைவேந்தரின் பொறுப்பற்ற செயலைக் காட்டுகிறது. கல்வியாளர்கள் உறுதியாக நின்று இதுபோன்ற போக்குகளை எதிர்க்கவில்லை என்றால் உயர்கல்வியின் நிலை அதோகதியாகி விடும். பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து பாடநூலை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லாத துணைவேந்தர்,  ஏபிவிபி அமைப்பின் அழுத்தத்துக்கு அடிபணிந்து பாடநூலை தன்னிச்சையாக நீக்கியதால், தமிழக அரசு துணை வேந்தரை  உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் நீக்கப்பட்ட பாடநூலை உடனடியாக பாடத்திட்டத்திலேயே மறுபடி இணைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.