மேமாத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
மயிலாடுதுறை, ஆக. 23- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் கூடலூர், கீழ்மாத்தூர், மேமாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கான `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு இறப்பு சான்று, வருமானம், இருப்பிட சான்று உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள், மனுக்கள் கொடுத்தனர். இந்த முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, வட்டாட்சியர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து, முகாமில் உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் அதற்கான ஆணை வழங்கப்பட்டது. முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் தெட்சிணாமூர்த்தி, ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் ரெஜினா ராணி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பிரான்சுவா, வருவாய் ஆய்வாளர் கலைவாணி, ஊராட்சிச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.