பள்ளி வளாகத்தில் பிடிப்பட்ட பாம்பு 11 முட்டைகள் இட்டது
தஞ்சாவூா், செப். 21- தஞ்சாவூர் வல்லம் பகுதியில், ஒரு கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளி அருகே பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வன உயிர் மீட்பாளர்கள் அன்பு மற்றும் குழுவினர் அந்த இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, புதர்களின் அருகில் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு காணப்பட்டது. மீட்பு குழுவினர் பாம்பை பாது காப்பாக பிடித்து அலுவல கத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், நிறுவன இயக்குனர் சதீஷ்குமார் ராஜேந்திரன் அந்த பாம்பை பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனையில், பாம்பு வயிற்றில் முட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காப்பக பராமரிப்பில் பாம்பு வைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பாம்பு 11 முட்டைகளை இட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த தாய் சாரைப்பாம்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பத்திர மாக விடப்பட்டது. அதன் முட்டைகள் காப்பக பராமரிப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
