tamilnadu

img

மதுரை அரசரடி ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்காதே!

மதுரை, நவ. 29 - தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது.  இதனொரு பகுதியாக, மதுரை அரசரடி ரயில்வே மைதானம் உள்பட அதனையொட்டிய ஆயிரக்கணக்கான மரங்களுடன் வனம்போன்ற 40 ஏக்கர் அளவிற்கான ரயில்வே நிலத்தையும் தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளது. ஆனால், மதுரை மக்களின் சுவா சத்திற்கு, சுத்தமான ஆக்சிஜனை உற்பத்தி செய்துதரும் நுரையீரலாக விளங்கும் இந்தப் பகுதியை தனியா ருக்கு விற்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   ‘அரசரடி ரயில்வே மைதானம் மற்றும் நில பாதுகாப்புக்குழு’ என்ற பெயரில் பல்வேறு அமைப்புக்கள், மன்றங்கள், அரசியல் கட்சிகள் ஆகிய வற்றை இணைத்து மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்துள்ள மதுரை மக்கள், தொடர் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதனொரு பகுதியாக, நவம்பர் 29 புதனன்று ஒரே நாளில் 100  மையங்களில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இதில், மதுரை பெரியார் பேருந்து  நிலையத்தில் நடைபெற்ற இயக்கத்தை  மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பூமி நாதன், துணை மேயர் தி. நாகராஜன் (சிபிஎம்), ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கு. ஜக்கையன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  இதேபோல மதுரை மாநகரம் முழு வதும் 100 மையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், சு. வெங்டேசன் எம்.பி., முன்னாள் மேயர் குழந்தை வேலு உள்ளிட்ட நகரின் முக்கியப் பிரமுகர் கள் கலந்து கொண்டனர்.