மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யக் கோரி கையெழுத்து இயக்கம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 13- திருச்சி மாவச்சம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமனம் செய்து 3 ஷிப்டுகளிலும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதிக்குழுச் செயலாளர் தர்மா தலைமை தாங்கினார். கையெழுத்து இயக்கத்தை மூத்த தோழர் நந்தகுமார் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், சந்தானம் பகுதிக்குழு உறுப்பினர்கள் ரகுபதி, கோவிந்தன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை விளக்க துண்டு பிரசுரங்களை கொடுத்து கையெழுத்து பெற்றனர்.