tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

சிபிஎம் முதுபெரும் தலைவர் அச்சுதானந்தன்மறைவு: ஜவாஹிருல்லா இரங்கல்

பாபநாசம், ஜூலை 22-  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அச்சுதானந்தன் மறைந்தார் என அறிந்து மிகவும் துயருற்றேன். வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் தனது இளமை காலத்தில் பெற்றோரை இழந்தவர். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த அவர், வாழ்வில் பல சவால்களைச் சந்தித்து, சாதனை படைத்தவர். 2006 ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்தார். சிந்தா மலையாள வார இதழின் ஆசிரியராக இருந்து இலக்கியத் துறையிலும் முத்திரை பதித்தவர். தோழர் அச்சுதானந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரிய ஒளி மின்சக்தி ஆலையை  அகற்றக் கோரி முற்றுகை

புதுக்கோட்டை, ஜூலை 22-  புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம், லெக்கனாப்பட்டி, விளாப்பட்டி, நாங்குடிப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களை ஏமாற்றி அபகரித்து தொடங்கப்பட்டுள்ள தனியார் சூரியஒளி மின்சக்தி ஆலையை அகற்றக் கோரியும், இதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியும் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அரசு மகளிர் கல்லூரி அருகிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கசி. விடுதலைக்குமரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வீ. வீரக்குமார் முன்னிலை வகித்தார். அக்கட்சியினர் 27 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டிவிஎஸ் முக்கத்தில் மீண்டும்  ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதி வேண்டும் சிஐடியு மனு

புதுக்கோட்டை, ஜூலை 22- புதுக்கோட்டை டிவிஎஸ் முக்கத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தை, போக்கு வரத்துக்கு இடையூறின்றி அருகிலேயே அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம்  (சிஐடியு) சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் இதற்கான மனுவை சங்கத்தினர் அளித்தனர். அதில், “டிவிஎஸ் முக்கத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு, நெரிசல் ஏற்படாத வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தப் பகுதியில் இருந்த ஆட்டோ நிறுத்தம் அகற்றப்பட்டது. 21 ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர், சுமார் 40 ஆண்டுகாலம் பிழைப்பு நடத்தி வந்த ஆட்டோ நிறுத்தம் அகற்றப்பட்டதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் இருப்ப  தாகவும், கழிவுநீர்க் கால்வாய் அருகில் போக்குவரத்துக்கு இடையூறின்றி ஆட்டோக்களை நிறுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.