நள்ளிரவில் பட்டியலின பெண்கள் கைது! காவல்துறையை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஆக. 30- திருவாரூர் கட்டபொம்மன் நகரில் வசித்து வரும் பட்டியலின மக்களை, சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை கைது செய்து சிறையில் அடைத்த திருவாரூர் காவல்துறையைக் கண்டித்தும் பழைய பேருந்து நிலையம் அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கே.தமிழ்மணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.முரளி, மாவட்டப் பொருளாளர் எஸ். சாமிநாதன், சிபிஎம் நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ், ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, பா.கோமதி, கே.பி. ஜோதிபாசு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சௌந்தராஜன், விடுதலைச் சிறுத்தை கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் அதிகாரக் கழகம், வளரும் தமிழகம் உட்பட, தோழமை அமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் கட்டபொம்மன் தெருவில் வசித்து வரும் பட்டியலின மக்களை சாதிப் பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தையில் பேசிய காவலர்கள் மீது புகார் அளித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வைத்த பட்டியலின மக்களை பழி வாங்கும் நோக்கில், வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து, பட்டியலின ஆண்கள் கிடைக்காத காரணத்தால், நள்ளிரவில் பட்டியலினத்தவர் வீடுகளின் கதவுகளை உடைத்து பட்டியலின பெண்களை கைது செய்துள்ள காவல்துறையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.