tamilnadu

img

உ.செல்லூர் கிராமத்தில் சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்

உ.செல்லூர் கிராமத்தில் சாலை வசதி கேட்டு  நாற்று நடும் போராட்டம்

கள்ளக்குறிச்சி, அக்.17 - கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட உ.செல்லூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிழக்குத் தெரு மற்றும் சுடுகாட்டுப் பாதை சேறும் சகதியாக உள்ளதை கண்டித்து வெள்ளியன்று(அக்.17) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உ.செல்லூர் கிளை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழைக்காலத்தில் கிழக்குத் தெரு சேறும் சகதியாக மாறி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெரியோர்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் திருநாவலூர் பிடிஓ நிர்வாகம் உடனடியாக சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்றும், செம்மண் நிறைந்த சுடுகாட்டுப் பாதையில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும்போது வழிக்கு விழும் அவல நிலை உள்ளதால் தார் சாலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் இடத்தைப் பார்வையிட்டனர். ஒரு வாரத்திற்குள் சுடுகாட்டுப் பாதையை சீரமைத்து தார் சாலை அமைப்பதாகவும், கிழக்குத் தெருவிற்கு சிமெண்ட் சாலை வைப்பதற்கு டெண்டர் விடப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. கிளை தலைவர் இ.திவாகர் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார், மாவட்ட தலைவர் இ.சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் கா.சக்கரவர்த்தி, ஒன்றிய தலைவர் த.ரகு, ஒன்றிய துணைத்தலைவர் எம்.வீரன் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.