நீரில் மூழ்கிய பயிர்களின் பாதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்க! தமிழக அரசுக்கு சாமி.நடராஜன் கோரிக்கை
திருவாரூர், அக். 23- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஒன்றியங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பயிர்களின் பாதிப்பு நேரில் சென்று கள ஆய்வு செய்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள், விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்து உரிய வகையில் நிவாரணம் தமிழ்நாடு அரசிடம் பெற்று தருவதாக உறுதி அளித்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள கீழ திருப்பாலங்குடி, மணக்கரை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையம் சென்று, அங்கு இருந்த விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளின் விபரங்கள் மற்றும் சேதமடைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து கோட்டூர் ஒன்றியம் கர்ணவூர் வயலில் மூழ்கியுள்ள சம்பா நடவு செய்த இளம் நாற்றுகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர். முத்துப்பேட்டை ஒன்றியம் பாண்டியில் தண்ணீரில் மூழ்கிய நடவு செய்த வயல்கள் மற்றும் கோட்டூர் ஒன்றியம் கச்சனத்தில் குறுவை பயிர் அறுவடை செய்ய முடியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களையும் பார்வையிட்டனர். இதேபோல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடா மங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஒளிமதி, வையகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளையும் கள ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவிக்கையில், “திருவாருர் மாவட்டத்தில் பருவமழைக்கு முன்பாகவும், கடந்த 17 ஆம் தேதி இருந்து தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், குறுவை சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தண்ணீரில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மிகக் கடுமையான பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ள இத்தருணத்தில், தமிழ்நாடு அரசு பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திட உத்திரவிடுவதுடன், பாதிப்புகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார். ஆய்வின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டர் பொருளாளர் வி.எஸ். கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் ஜெயபால், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் ஜான்கென்னடி, மன்னார்குடி விவசாய சங்கத்தின் நகரச் செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
