tamilnadu

img

கொல்லாங்கரையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதை அடைப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கள ஆய்வு

கொல்லாங்கரையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதை அடைப்பு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கள ஆய்வு

தஞ்சாவூர், செப். 29-  தஞ்சாவூர் மாவட்டம் கொல்லாங்கரை கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள், காலங்காலமாக பயன்படுத்தி வந்த பொது வண்டிப் பாதையை, அதே கிராமத்தைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்தியைச் சார்ந்த சாமிநாதன் என்பவர் ஆக்கிரமித்து, அடைத்து, மிகவும் அராஜகமாக தடுத்து வந்தார்.  கிராம மக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் ஊரை விட்டு வெளியில், செல்வதற்கும், பள்ளிக்குச் செல்வதற்கும் நீண்டதூரம் சுற்றிவர வேண்டிய நிலையில் அல்லல் படுகின்றனர். எனவே, தாங்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ள சாமிநாதன் மீது நடவடிக்கை எடுத்து, பாதையை மீட்டுத் தருமாறு, அரசு அலுவலர்கள் மத்தியில் முறையிட்டுள்ளனர்.  இந்நிலையில், சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், கடந்த மே 2 ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பேச்சுவார்த்தை நடைபெற்றது.  பேச்சுவார்த்தையில், சாமிநாதன் பாதையை தடுக்க கூடாது. வேலி வைக்கக் கூடாது என்று பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 24.09.25 அன்று, பட்டியலின சமூக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, சாமிநாதனின் மனைவி தனசுந்தரி கையில் கட்டையுடன் ஓடி வந்து தடுத்து நிறுத்தி, சாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசி, அடாவடியாக நடந்து கொண்டுள்ளார். அவர் மாணவர்களை தாக்கியதில், மூன்று பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று இருவர் வீடு திரும்பிய நிலையில், ஒரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட பெண் நடத்திய வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உடனடியாக களத்திற்கு சென்று விசாரணை நடத்தியது.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த. செல்லக்கண்ணு தலைமையில், 28.09.25 அன்று நேரடியாக சென்று, கள ஆய்வு மேற்கொண்டு, கிராம மக்களை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாங்கள் உங்களோடு துணை நிற்போம் என உறுதி அளித்தனர்.  பின்னர் இதுகுறித்து தீஒமு நிர்வாகிகள் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை வேண்டும். பட்டியல் சமூக மக்களுக்கான பொதுப் பாதையை உடனடியாக மீட்டுத் தர அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் காலமாக பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அடாவடியாக ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மக்கள் பயன்பாட்டிற்காக பாதையை மீட்டுத் தரவேண்டும்’’ என்றனர்.  இந்நிகழ்வில், அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் கே.முனியாண்டி, ஆர்.பிரதீப் ராஜ்குமார், வீ.கரிகாலன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. அபிமன்னன், என்.சரவணன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜு, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.