tamilnadu

img

வருவாய்த்துறையினர் கோரிக்கை மாநாடு: காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

வருவாய்த்துறையினர் கோரிக்கை மாநாடு: காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக. 23-  பெரம்பலூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பாரதிவளவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் கதிர், செந்தமிழ்செல்வன், காந்தி, மாசந்திரன், பிரேம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.  மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜபருல்லா கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திஉரையாற்றினார்.  மாநாட்டில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும். பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்டப் பொருளாளர் அருளானந்தம் நன்றி கூறினார்.  கரூர் வருவாய்த்துறை சங்கங்களின் கோரிக்கை மாநாடு கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். மோகன்ராஜ் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பிரபு வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு  மாநிலத் துணைத் தலைவர் செ.முருகேசன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்‌.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஓ.பி.ஆர். செந்தில், மாவட்டச் செயலாளர் ஜெயவேல் காந்தன், நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்டத் தலைவர் மகேந்திரன், வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அரசகுமாரன், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் நாகமணிகண்டன் ஆகியோர் மாநாட்டில் பேசினர்.  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில முன்னாள் தலைவர் இரா.அழகிரிசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் அருண் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.