பேராவூரணி அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை
தஞ்சாவூர், ஆக. 14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, பள்ளமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பேராவூரணியில் இருந்து, சேதுபாவாசத்திரம் செல்லும் முசிறி - சேதுபாவாசத்திரம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, இந்த பாதையில் உள்ள பாலங்கள் புதிதாக கட்டப்படுகிறது. இந்நிலையில், பூக்கொல்லையில் கிராம அஞ்சல் அலுவலகம் முன்பு ஒரு சிறிய பாலம், பிள்ளையார் கோவில் அருகே, கல்லணைக் கால்வாயின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மேல், தார்ச்சாலை அமைப்பதற்காக, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணி முடிக்கப்படாமல் உள்ளது. சாலையில் சில இடங்களில் பெரும் பள்ளமாக உள்ளது. கிழக்கு கடற்கரையை இணைக்கும் இந்தச் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தச் சாலை வழியாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மணக்காடு வீ.கருப்பையா கூறுகையில், “சாலையில் பல இடங்களில் பள்ளமாக உள்ளது. தார்ச்சாலையில் பள்ளம் இருப்பது அருகில் வந்தால் தான் தெரியும் வகையில் உள்ளது. இரவு நேரங்களில் இந்தப்பகுதி இருண்டு காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் வருவோர் தவறி விழுந்து காயப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனடியாக சாலையில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.