குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க கோரிக்கை
நாகப்பட்டினம், ஆக 1- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் செவ்வாயன்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கீழ்வேளூர் வட்ட மாநாடு வட்டத் தலைவர் என். பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. எஸ்.சந்தானம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். கே.குப்புசாமி வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன் துவக்க உரையாற்றினார். வட்டச் செயலாளர் எஸ்.முபாரக் வேலை அறிக்கையையும், வட்டப் பொருளாளர் என்.புகழேந்தி வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். கீழ்வேளூர் வட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகம் துவக்கப்பட வேண்டும். கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு வண்டிகளும் நின்று செல்ல வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850/- வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் வட்டத் தலைவராக என்.பக்கிரிசாமி, செயலாளராக எஸ்.முபாரக், வட்ட துணைத் தலைவர்களாக பி.தரசுராமன், எஸ்.சந்தானம், இணைச் செயலாளர்களாக எம்.பாலசுப்பிரமணியன், எஸ்.அருளேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளர் சு.சிவகுமார் நிறைவுரையாற்றினார். வட்டத் தலைவர் என்.பக்கிரிசாமி நன்றி தெரிவித்தார்.