நாகப்பட்டினம் புதிய கடற்கரை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை
நாகப்பட்டினம், அக். 23- வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகப்பட்டினம் மாவட்டம் மும்மதங்களும் சங்கமிக்கும் மாவட்டமாகும். சிக்கல் சிங்காரவேலர், வேளாங்கண்ணி மாதா, நாகூர் தர்க்கா போன்ற வழிபாட்டு தலங்கள், மத வேற்றுமை மறந்த மனிதர்கள், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் உள்நாட்டு உணவுத் தேவைக்கும் சிறந்து விளங்கும் மீன்பிடித் தொழில், விவசாயம், உப்பு உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்கள் இருந்தாலும், தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டம் இதுவாகும். ஆறு மாதங்களுக்கு மட்டுமே விவசாயம் சார்ந்த தொழில்கள் இருக்கும் சூழலில், வேறு வகையான தொழில்களை ஒன்றிய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. வரலாற்றுரீதியாக சிறப்புற்று விளங்கிய துறைமுகம், அரசுகளின் பாராமுகத்தால் செயலற்று உள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒரு காலத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதனை நம்பி மதுரை, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் இங்கு வந்து வாழ்க்கை நடத்தினர். தற்போது துறைமுகம், தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்படுகின்றனர். மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகம் பழைய நிலைக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நாகப்பட்டினம் பகுதி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாக உள்ள நாகப்பட்டினம் கடற்கரை, உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது. காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி வருபவர்கள், மாலை வேளையில் குழந்தைகளுடன் பொழுதுபோக்க வருபவர்கள் உள்ளிட்ட, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிலேயே இருந்துவருகிறது. இந்த நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஒரளவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்ந்து பராமரிப்பு செய்யப்படுவதில்லை. அதேபோல், கடற்கரையில் மக்கள் இருக்கும்போது, திடீரென மழை வந்தால் ஒதுங்கி நிற்பதற்கு ஒரு இடம்கூட இல்லை. அனைவரும் மழையில் நனைந்தே ஆகவேண்டும். புதிய கடற்கரை நோக்கி, ரயில்வே கேட்டிலிருந்து கடற்கரை பூங்காவரை இரண்டு பக்கமும் உள்ள நடைபாதையில், குறைந்த உயரத்தில் நிழல் தரவும், மழையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் சிறிய ஷெட் அமைத்து தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நகரச் செயலாளரும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் குறிப்பிடும்போது, “நாகப்பட்டினம் பகுதி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான நாகப்பட்டினம் புதிய கடற்கரையில், மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நாகப்பட்டினம் நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் செய்துதர வேண்டும். மழைநேரத்தில் ஒதுங்குவதற்கு ஷெட் அமைத்து தரவேண்டும். கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாடும் இடத்தில் துருபிடித்து, ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ளவற்றை சரிசெய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
