வாக்குத் திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில். ஆக. 26- திட்டுவிளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் சார்பாக வாக்குத் திருட்டை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வாக்கு உரிமை சட்டத்தை மீறும் வகையில் வாக்குதிருட்டை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கவேண்டும் என பேசினர்.
வெட்டுவெந்நியில் குழந்தைகள் பூங்கா திறப்பு
குழித்துறை, ஆக. 26- குமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி வெட்டுவெந்நி பகுதியில் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் பூங்கா திறக்கப்பட்டது. மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி ஜங்ஷனில் பழமை வாய்ந்த பூங்கா நகராட்சி அலுவலகத்தின் முன் பகுதியில் பெயர ளவில் செயல்பட்டு வந்தது. இந்தப் பூங்காவில் அதிகமான விளையாட்டு உபகரணங்களுடன் கூடுதல் வசதிகளை செய்து கொடுத்து புனரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தினர். இதனைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி சார்பில் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அலங்கார நீரூற்று, ஊஞ்சல், மினி விளையாட்டு விமானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டன. சீரமைக்கப்பட்ட பூங்காவை குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி திறந்து வைத்தார் ஆணையாளர் ராஜேஸ்வரன், பொறியா ளர் குரல் செல்வி, கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்க! டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆக. 26- டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோய்த்தொற்று மற்றும் கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும் எச்சில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மதுபானக் கடைகளுக்கான மின் கட்டணத்தை நிர்வாகமே ஏற்று முழுத் தொகையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் கே.மதியழகன் தலைமையில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் துவக்கவுரையாற்றினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.வீரையன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஜி. பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு மற்றும் டாஸ்மார்க் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.