தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திடுக தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாத்திடுக
திருப்பூர், செப். 5 – இந்தியாவின் சுயசார்பு பொருளாதாரத்தை அழித்து அடிமைப்படுத்த நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல், சுயசார்பைப் பாதுகாக்கும் அரசியல் நிலை பாட்டை மோடி அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. திருப்பூரில் சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் புதனன்று மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன், கே.ஆறுமுக நயினார், துணைத்தலைவர் எம்.சந்திரன், மாநிலச் செயலாளர் கே.ரங்கராஜ் உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவிகித வரி விதிப்பினால் உள்நாட்டு ஏற்றுமதி தொழில்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா விற்கு அடிபணியாமல் சுயசார்பை பாதுகாக்கும் அரசியல் நிலைப்பாட்டை ஒன்றிய மோடி அரசு மேற்கொள்ள வேண்டும். கார்ப்பரேட் வரியை உயர்த்தியும், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் வணிகத்தில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை திரட்டியும், அமெரிக்க வரி திணிப்பால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தொழில்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பாதிக்கப்படும் தொழில்களில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுக்கு வலியுறுத்தல் சென்னை பெருநகர மாநகராட்சியில் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது, உயர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, கடுமை யாக தாக்குதல் நடத்தி கைது செய்ததை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணி களை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச கூலி அரசாணை உத்தர வின்படி ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் ஆகஸ்ட் 18 முதல் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். சென்னையில் தனியார் நிறுவனம் மூலம் மின்சாரப் பேருந்து இயக்க உள்ளதை கைவிட்டு, தமிழக அரசு நிதி உதவியுடன் 650 மின்சார பேருந்துகளை போக்குவரத்துக் கழகத்தின் மூலம் நிரந்தர பணியாளர்களை வைத்து இயக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறி யாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு குறித்து உடனடியாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் காண வேண்டும். டி.சி.எஸ், இன்டெல் உள்ளிட்ட பெரும் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) நிறுவனங்களில் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பு இன்றியும், தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல், 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி யாக தலையிட்டு இப்பிரச்சனையில் சுமூகத்தீர்வு காண வேண்டும். தமிழக மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் திட்டத்தில் மானிய விலையில் மின்சாரம் பெறும் சாமானிய மக்கள், சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே கேரளா அரசு ஸ்மார்ட் மீட்டரை மின்சார ஊழியர்களே பொருத்தும் திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கியதைப் போல, தமிழக அரசும் அனுமதி பெற்று அமலாக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தின் எல் & டி கட்டுமான பணியில் வேலை செய்த அமல் பிரசாத் என்ற தொழிலாளியின் இறப்பில் மர்மம் நிலவுவதாக, அங்கு பணியாற்றும் 2000 புலம்பெயர் தொழிலாளர் வேலையைப் புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் காவல்துறையைக் கொண்டு தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இது குறித்து நியாயமான விசாரணை தேவை. கைது செய்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் ஊழியர்கள் பணிச்சுமை அதிகரித்து ஓய்வு உறக்கமின்றி உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. எனவே காலி மதுபாட்டில்களைப் பெற மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு ஒழிப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் ஹவுஸ்கீப்பிங், பரிசோதனை கூடங்கள் உள்ளிட்ட பணிகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பல ஆண்டு காலமாக தொகுப்பூதியம், ஊக்கத்தொகை என குறைந்த ஊதியத்தில், சட்டச் சலுகை இன்றி பணியாற்றுகின்றனர். கண்ணியமான வேலை, நியாயமான ஊதியம் வழங்கி அவர்களின் பணி நிலைமைகளில் அரசு மாற்றம் ஏற்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு பாஜக அரசு ரத்து செய்த குழுக் காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.