மணிப்பூர் மக்களுக்கு பதில் சொல்லாத பிரதமர் மோடியின் வெற்று ‘நாடகப்’ பயணம்
இம்பால், செப். 14 - மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் முதல் நடைபெற்று வரும் மிக மோசமான வன்முறை மற்றும் இன நெருக்கடிக்கு குறிப்பிட்ட தீர்வு திட்டம் ஏதும் அறிவிக்காமல், வெறும் வளர்ச்சித் திட்ட திறப்பு விழாக்களுக்கு மட்டுமே வந்த பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம், ‘வெற்றிகரமான வெற்று நாடகப் பயணம்’ மட்டுமே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிப்பூர் மாநிலக் குழு கடுமையாக விமர்சித்துள்ளது. நெருக்கடிக்கு தீர்வு எங்கே? வன்முறை வெடித்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் செப்டம்பர் 13 சனிக்கிழமை மணிப்பூருக்கு முதல் முறையாக வந்த பிரதமர் மோடி, சூரச்சந்திர்பூர் மற்றும் இம்பாலில் ₹8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார். ஆனால் 2023 மே 3 முதல் நடைபெற்று வரும் மணிப்பூர் நெருக்கடிக்கு குறிப்பிட்ட அமைதித் தீர்வு திட்டம் எதையும் அவர் அறி விக்கவில்லை என்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சேத்ரிமயூம் சந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “பிரதமர் வெறும் திறப்பு விழாக்கள் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி களுக்கு மட்டுமே வந்துள்ளார்” என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. “அவர் அறிவித்த பல திட்டங்கள் முந்தைய காங்கிரஸ் அரசாங்க காலத்தி லேயே கிட்டத்தட்ட முடிக்கப்பட்டவை யாகும். இது, மணிப்பூர் நெருக்கடி யைப் பற்றி பிரதமர் மோடி கவலைப் படாமல் இருப்பதைக் காட்டுகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரதமரின் மணிப்பூர் பயணம், பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த மக்களுக்கு எந்த உருப்படியான தீர்வை யும் சொல்லாதது மட்டுமல்ல; அவர் களின் எதிர்காலத்திற்கு மேலும் பாதகம் விளைவிக்கிற - அதேவேளையில் இதுவே தனது வெற்றி என்று அறிவிக் கின்ற படாடோபமான பயணமே தவிர வேறல்ல என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் செப்டம்பர் 9 அன்று, பிரதமரின் பய ணத்தை வரவேற்று அறிக்கை வெளி யிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. பிரதமர் அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களு டன் ஆலோசித்து மாநிலத்தில் அமைதி கொண்டுவருவதற்கான திட்டத்தை அறிவிப்பார் என்று கட்சியும், மணிப்பூர் மக்களும் எதிர்பார்த்திருந்தனர். “ஆனால் எங்கள் எதிர்பார்ப்பு களுக்கு மாறாக, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், பிரதமருடன், நடை பெற்றுக் கொண்டிருக்கும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யவில்லை, அழைப்பும் விடுக்கவில்லை” என்று சேத்ரிமயூம் சந்தா, அதிருப்தி தெரிவித்துள்ளார். அகதி முகாம்களைப் புறக்கணித்த பிரதமர் மார்க்சிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய விமர்சனம், பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து தங்கியுள்ள தற்காலிக அகதி முகாம்களை (IDPs) பிரதமர் பார்வையிடாததுதான். “வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநி லத்தின் பல இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக அகதி முகாம்களில் பரிதா பகரமான நிலையில் வாழ்ந்து வரு கின்றனர்” என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது. “பிரதமர் இந்த முகாம் களைப் பார்வையிடவில்லை. மாறாக அதிகாரிகள் பொதுக்கூட்ட மேடைக்கு அருகிலுள்ள பின்னறையில், தேர்ந்தெ டுக்கப்பட்ட சில பாதிக்கப்பட்டோருடன் மட்டும் சந்திப்பை ஏற்பாடு செய்தனர்” என்றும் விமர்சித்துள்ளது. பிரதமரின் பசப்பு வார்த்தைகள் மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் முதல் மெய்டெய் பெரும்பான்மையினருக்கும் குக்கி பழங்குடி சமூகத்திற்கும் இடையே நடை பெற்ற இன மோதல்களில் குறைந்தது 260 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அரசு ஏற்பாடு செய்த தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். இதைப்பற்றி எந்த வார்த்தையும் பேசாத பிரதமர், தனது பயணத்தின் போது மணிப்பூரை “தைரியம் மற்றும் உறுதியின் நிலம்” என்று அழைத்து, “புதிய விடியலை நோக்கி” மாநிலம் செல்கிறது என்றும் கூறினார். “உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அமைதியின் பாதையைக் கடைப்பிடிக்குமாறு” அனைத்து குழுக் களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். செய்ய வேண்டியது என்ன? மணிப்பூரில் நடைபெற்று வரும் இன நெருக்கடிக்குத் தீர்வு காண அரசு ஆர்வமாக இருந்தால், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட மக்கள் சமூகங்களுடன் உரையாடல்கள் மற்றும் விவாதங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. “மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையைக் கொண்டுவர வேண்டுமென்றால் தீர்வு இருக்கிறது. மணிப்பூர் மக்களின் நலனுக்காக, இணைந்த மற்றும் ஒருங்கிணைந்த வலு வான மணிப்பூருக்காக, மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை நாம் ஒரு வருக்கொருவர் மன்னித்து மறக்க வேண்டும், அதை நோக்கிய முயற்சிகள் துவங்க வேண்டும்” என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்காக அரசியல் கட்சிகளின் தலைமை, சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நெருக்கடியின் பிடியில் உள்ள மக்கள் சமூகங்களுடன் உரையாடல்கள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்ய மத்திய மற்றும் மாநில அதிகாரிகளிடம் மீண்டும் ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.