tamilnadu

img

ஆதரவற்றோர் 13 பேரின் உடல்களை அடக்கம் செய்த காவல்துறையினர்

ஆதரவற்றோர் 13 பேரின் உடல்களை  அடக்கம் செய்த காவல்துறையினர்

தஞ்சாவூர், அக். 11-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில், யாரும் உரிமை கோராமல் இருந்த 13 பேரின் உடல்களை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனர். தஞ்சாவூர் மாநகரில் நகர கிழக்கு, மேற்கு, தெற்கு, கள்ளப்பெரம்பூர் மற்றும் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆதரவின்றி இறந்து கிடந்த 13 பேரின் உடல்களை காவல்துறையினர் மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர்.  இந்த 13 உடல்களை ஆதரவு கோரி யாரும் வராததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் தலைமையில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் சந்திரா, சுகாதார ஆய்வாளர் வடிவேல், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் 13 உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, 13 (11 ஆண், 2 பெண்) பேரின் உடல்களை அடக்கம் செய்ய இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையேற்றுக் கொண்ட நிர்வாகம், உரிய சான்றிதழ்களில் காவல்துறையினரிடம் கையெழுத்து பெற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, கொண்டு செல்ல அனுமதித்தனர்.  இதனைத் தொடர்ந்து, வடக்கு வாசலில் உள்ள ராஜாகோரி மயானத்திற்கு 13 உடல்களும் கொண்டு செல்லப்பட்டு, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.