tamilnadu

பாமக கோஷ்டிகள் மோதல்: பேரவைத் தலைவர் எச்சரிக்கை

பாமக கோஷ்டிகள் மோதல்: பேரவைத் தலைவர் எச்சரிக்கை

சென்னை, அக்.17 - பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜி.கே.மணியை  மாற்றக் கோரி பேரவைத் தலைவரிடம் கொடுத்த கடிதங்களின்  மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி தரப்பு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான வெள்ளி யன்று, கோல்ட்ரிப் மருந்து விவகாரம் தொடர்பாக கொண்டு  வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ராமதாஸ் தரப்பு  சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு பேச வாய்ப்பு வழங்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு  சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும் பேரவைத் தலைவரின் இருக்கை முன்பாக கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட னர். விளக்கமளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சட்டப் பேரவையை பொறுத்தவரை எதிர்க்கட்சி வரிசையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும்தான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்குவதற்கான விதிமுறை இருப்பதாக வும், மீதமுள்ள உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்குவது தனது முடிவு என்றும் தெரிவித்தார். பாமகவின் உட்கட்சி பிரச்சனைகளை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். எட்டு உறுப்பினர்கள் இருக்கும் கட்சி ஒரு குழுவாக மட்டுமே செயல்படும் என்றும், தன்னிடம் கொடுத்த கடிதம்  பரிசீலனையில் இருக்கும் நிலையில் அன்புமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகியோர் பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவது சரியில்லை என்றும்  பேரவைத் தலைவர் கூறினார். உடனடியாக இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.