பெரம்பலூரில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணி
பெரம்பலூர், ஆக. 22- பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், நடப்பாண்டில் 10,000 மரக்கன்றுகள் நடும் விதமாக செஞ்சேரி முதல், கோனேரிபாளையம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டு, மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வெள்ளி க்கிழமை தொடங்கி வைத்தார். நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தையும் முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்திடவும், கால்நடைகளிடமிருந்து பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து, முறையாக பராமரித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கலைவாணி, உதவி கோட்டப் பொறியாளர், சாலை ஆய்வாளர், சாலை பணியாளர்கள், அரசு அலு வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
இராமநாதபுரம், ஆக.22- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பெருமாள் கோவில் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் பரமக்குடி உதவி இயக்குநர் மருத்துவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாடுகளில் கால்கனை வாய்க்கானை மற்றும் கன்று வீச்சு நோய், ஆடுகளில் ஆட்டுக்கொல்லி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளின் உரிமையாளர் மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு பொருட்கள் வழங்கப் பட்டன.
உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
தஞ்சாவூர், ஆக. 22- தஞ்சாவூரில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தஞ்சாவூர் வருவாய் கோட்டா ட்சியர் செ. இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது: கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. தனியார் கடைகளில் யூரியா கேட்டால் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் வாங்கினால்தான் யூரியா கொடுப்போம் என்கிறார்கள். உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். திருவையாறு பகுதியில் குறுவை தொகுப்பை விரை வாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்ணுக்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் களைக் கொல்லிகளை தடை செய்து நூறு நாள் பணியாளர்களை களை எடுக்க பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். உரக்கடைகளில் உரம் வாங்கும்போது இணை உரங்களை வாங்கக் கூறி கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு மூட்டை யூரியா வாங்கினால், நுண்ணூட்டம் ஒரு மூட்டை வாங்க வேண்டும் என வற்புறுத்துவதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவா கிறது. இவ்வாறு நிபந்தனை விதிக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் சாகுபடியை ஊக்குவிக்க புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலி யுறுத்தினர்.