பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனை உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரி மனு
பெரம்பலூர். ஆக.17 - சுதந்திர தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சத்தியசீலன், ஊராட்சி செயலரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், “வேப்பூரில் உள்ள ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வேப்பூர் பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமரா மற்றும் நேர கால அட்டவணை பொருத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்கு காவலர்களை காலை-மாலை என இருவேளையும் ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் ரூ.319 கூலி வழங்க வேண்டும். புதிய அங்கன்வாடி மையம் மற்றும் புதிதாக வாட்டர் டேங்க் அமைக்க வேண்டும். புதிய காலனி பகுதியில் வீடு கட்ட முடியாத ஏழ்மையில் நிலையில் உள்ள மக்களுக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டம் அல்லது ஒன்றிய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர வேண்டும். அம்மா பூங்காவை சீர் செய்து தர வேண்டும். இடுகாட்டுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை மற்றும் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.