ஓய்வூதியர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் ஓய்வூதியர்கள் சங்கங்கள் வலியுறுத்தல்
புதுச்சேரி, செப்.25- ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள ஓய்வூதியர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு மேடை வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு மேடையின் பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன் வியாழக்கிழமை செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள ஓய்வூதியர்களுக்கு எதிரான பென்சன் திருத்த சட்டத்தை திரும்ப பெறுவது, 8வது ஊதியக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதற்கான வரம்பு குறிப்பை அறிவிப்பது, ஓய்வூதியர்கள், ஓய்வு பெறும் தேதியை வைத்து ஓய்வூதியர்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு மேடை சார்பில் பலகட்ட போராட்டங்களை நாங்கள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடத்தி வருகிறோம். புதுச்சேரியில் விருப்பமுள்ள ஓய்வூதி யர்களுக்கு சிஜிஎச்எஸ் திட்டத்தை அமல்படுத்தவும் மற்ற ஓய்வூதியர்களுக்கு FMAவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு மேடையின் அறைகூவலை ஏற்று தொடர்ச்சியான 5 கட்ட போராட்டங்களை புதுச்சேரியில் நடத்தியுள்ளோம். மேலும் துணைநிலை ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு, நாடாளுமன்றத்தில் எங்களுடைய கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறை வேற்றும் வகையில் குரல் எழுப்ப வேண்டும் என்ன வலியுறுத்தி கோரிக்கை மனுவும் அழிக்கப்பட்டுள்ளது. தில்லியில் போராட்டம் எங்கள் சங்கங்களின் கூட்டு மேடையின் அகில இந்திய ஓய்வூதியர் அறைகூவலுக்கிணங்க இறுதிகட்ட போராட்டமாக, எதிர்வரும் அக்.10 அன்று புது தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு மேடையின் சார்பாக மாபெரும் பேரணி நடத்தி, அதன் இறுதியில் பிரதம மந்திரிக்கு மனு வழங்குவதோடு, உச்ச நீதிமன்ற நீதிபதியும் சந்தித்தும் மனு வழங்க உள்ளோம். போராட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரியிலிருந்து பல்வேறு ஓய்வூதி யர் அமைப்புகளின் சார்பாக 15 பேர் கலந்து கொள்வது என்று திட்ட மிடப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய பாஜக அரசு ஓய்வூதியர்கள் உடைய நலன்களை பாதுகாக்க அனைத்து கட்ட முயற்சி களையும் எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறோம். இச்சந்திப்பின் போது ஓய்வூதிய சங்கங்களின் நிர்வாகிகள் நடராஜன், கலியமூர்த்தி, சிவக்குமார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.