எங்கள் அப்பா நல்லவர்
எல்லா வற்றிலும் வல்லவர்!
எங்கள் தேவை அறிந்தவர்
ஏற்றதை வாங்கித் தருபவர்!
கல்வி தந்து போற்றுவார்
கடமை எல்லாம் ஆற்றுவார்!
கலைகள் பலவும் கற்பிப்பார்
காட்சியில் எங்களைச் சிறப்பிப்பார்!
எங்கள் அம்மா நல்லவர்
எங்களை வளர்க்கும் வல்லவர்!
பொங்கும் அன்பைக் காட்டுவார்
பொழுது முழுதும் போற்றுவார்!
எங்கள் அண்ணன் நல்லவன்
எங்களைப் போற்றிக் காப்பவன்!
எங்க ளோடு ஆடுவான்
இனிமை யாகப் பாடுவான்!
எங்கள் அக்கா நல்லவள்
எங்கள் உயிரில் கலந்தவள்!
எங்க ளுக்கு ஊட்டுவாள்
இதய இன்பம் கூட்டுவாள்!
எங்கள் தம்பி தங்கைகள்
என்றும் தங்கக் கம்பிகள்!
எங்கள் வீட்டின் புகழ்ச்சியே
எங்கும் நிறைந்த மகிழ்ச்சியே!
எங்கள் தாத்தா பாட்டியோ
எளிய கதைகள் சொல்லுவார்!
தங்கள் வாழ்வின் அனுபவம்
தந்து நின்றே வெல்லுவார்!