பாஜக உறவை முறித்த ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை, ஜூலை 31 - தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இது வரை கொண்டிருந்த உறவை, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ முறித்துக் கொள்வதாக அதன் முன்னணி தலைவரான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் வியாழனன்று அறிவித்தார். கூட்டணி முறிவுக்கு காரணத்தைக் கேட்டபோது, காரணம் நாடு அறிந்ததே என்றும், பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில், மாலையில் ஆழ்வார்புரம் இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ ஒருங்கி ணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள முதல்வரை சந்தித்து நலம் விசாரிக்கவே வந்ததாக கூறினார். முதல்வருடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்றும் அதேநேரம் அரசியலில் நிரந்தர நண்பர்களோ பகைவர்களோ இல்லை அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார். எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. நான் ஜெயலலிதாவோடு 25 ஆண்டுகாலம் அவரின் நேரடிப் பார்வையில் பணியாற்றியிருக்கிறேன். அரசியல் ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் அனைத்தும் எனக்கு தெரியும். மக்களவையில் சமக்ர சிக்ச அபியான் நிதி உதவி பற்றி கேள்வி எழுப்பிய போது ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை. தமிழகத்திற்கு உரிய நிதி கொடுக்காததால் பாஜக மீது எனக்கு வருத்தம் உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யத் தவறினால் அதை கண்டறிந்து தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இச்சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் உடனிருந்தார்.