ரூ.90 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் விற்பனை: ஒருவர் கைது
அம்பத்தூர், ஆக. 29- பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கணபதி நகரைச் சேர்ந்தவர் மகாதேவன் (70). கடந்த 2006-ஆம் ஆண்டு இவர் வீட்டு மனை வாங்க முயன்ற போது சென்னை வளசரவாக்கம் பிரித்தானியா நகர் 1-ஆவது தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (72) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது காட்டுப்பாக்கம் கணபதி நகரில் 1,200 சதுரடி கொண்ட காலி மனையை பட்டா நிலம் கூறி மகாதேவனுக்கு குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். தற்போது அதே இடத்தில் மகாதேவன் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதிற்கிடையில் அண்மையில் மகாதேவன் தான் வாங்கி நிலத்தில் உண்மை தன்மையை அறியும் போது, அவர் வாங்கிய நிலம் அர சாங்கத்துக்கு சொந்தமான பூமிதான நிலம் என்பதும், அந்த இடத்தை சிஎம்டிஏ அனுமதி பெற்ற பட்டா நிலம் என கூறி ஜெயராஜ் ஏமாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது. இது குறித்து மகாதேவன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.காவல் ஆய்வாளர் ரமணி தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் ஜெயராஜை வியாழக்கிழமை கைது செய்தனர்.