tamilnadu

img

பச்சைக்கிளிகளின் சண்டை

உதயசங்கர்

காட்டில் இருந்த அத்தி மரத்தில் அத்திப்பழங்கள் கொத்துக் கொத்தாய் தொங்கின. அந்த மரத்தில் இருந்த பச்சைக்கிளிகளுக்கு மகிழ்ச்சி. இனி இரை தேடி அலைய வேண்டாம். விருப்பம்போல அத்திப்பழங்களைச் சாப்பிட்டன. அப்போது எங்கிருந்தோ பச்சைக்கிளிகளின் கூட்டம் ஒன்று பறந்து வந்தது. அத்திப்பழங்களைப் பார்த்ததும் அப்படியே மரத்தில் அமர்ந்தன. புதிதாக வந்த பச்சைக்கிளிகளைப் பார்த்த பழைய பச்சைக்கிளிகளுக்குக் கோபம். “இது எங்கள் மரம்.. நாங்க இங்கேயே ரொம்ப நாளா குடியிருக்கோம்.. எங்களுக்குத்தான் இந்த அத்திப்பழங்கள்..!” என்று கத்திச் சண்டையிட்டன. புதிதாக வந்த பச்சைக்கிளிகளின் தலைவி, “சகோதரா.. நாம் எல்லோரும் ஒரே இனம் தானே.. நீ எங்களுக்குக் கொஞ்சநாள் முன்னால் வந்தாய்.. நாங்கள் இப்போது வருகிறோம்.. அவ்வளவுதான்..” என்று சொல்லியது. “இல்லை.. முன்னால் வந்த எங்களுக்குத் தான் உரிமை.. நீங்கள் உடனே இங்கிருந்து போய் விடுங்கள்..” என்று கோபத்துடன் சண்டையிட்டன. அங்கே ஒரே குழப்பம். கூச்சல். புதிதாக வந்த பச்சைக்கிளிகளின் கூட்டம் வருத்தத்துடன் அத்தி மரத்தை விட்டுப் பறந்து போய் விட்டன. சிறிது நாட்களில் அத்திப்பழங்கள் தீர்ந்து விட்டன. அத்திமரப்பச்சைக்கிளிகள் உணவு தேடி வெளியில் சென்றன. ஆனால் உணவு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அப்போது ஒரு கொய்யாமரத்தில் கொய்யாப்பழங்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தன. அந்தக் கொய்யாமரத்தை நோக்கிப் பாய்ந்து சென்றன. அந்த மரத்திலிருந்து “இது எங்கள் மரம்.. இங்கேயே ரொம்பநாளாக குடியிருக்கிறோம்.. எங்களுக்குத்தான் இந்தக் கொய்யாப்பழங்கள்..வேறு யாருக்கும் அனுமதியில்லை..” என்ற குரல் கேட்டது. “ஐயா.. எங்களுக்கு மிகவும் பசிக்கிறது.. கொஞ்சம் தயவு செய்யுங்கள்..” என்று கெஞ்சின அத்திமரப்பச்சைக்கிளிகள். “சகோதரா.. இயற்கை நம் எல்லோருக்கும் சேர்த்துத்தான் உணவைத் தருகிறது.. எதுவும் யாருக்கும் சொந்தமில்லை.. நாம் பகிர்ந்து சாப்பிடுவோம்.. மகிழ்வுடன் வாழ்வோம்..” என்ற குரல் கேட்டுத் திரும்பிப்பாரத்தால், அங்கே முன்பு அத்திமரத்துக்கு வந்த கிளிகள் தெரிந்தன. “மன்னிக்கணும்.. தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம்..” “ம்ம் சாப்பிடுங்கள் வேண்டிய மட்டும் சாப்பிடுங்கள்..” என்ற அழைப்பு விடுத்தது அந்தக் கிளித்தலைவி.  பாய்ந்து சென்று பழங்களைக் கொத்தின அத்திமரக்கிளிகள். கிக்க்கீக்க்கீக்க்கீ என்று எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரே மகிழ்ச்சி! ஒரே சிரிப்பு!

;