ரயிலில் அனுமதியின்றி தின்பண்டங்கள், பழங்கள் விற்கக் கூடாது! ரயில் நிலைய வியாபாரிகளுக்கு உத்தரவு
கும்பகோணம், செப். 21- திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஆய்வாளர், சிறப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் உதவி ஆய்வாளர் குற்றப்புலனாய்வு பிரிவு ஆகியோர் இணைந்து, கும்பகோணம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவித் துணை ஆய்வாளர் துணையுடன், ரயிலில் பழங்கள், தின்பண்டங்கள் விற்கும் வியாபாரிகளுடனான கூட்டம், கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் நடைபெற்றது. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ரயில் நிலைகளுக்கு இடையில், ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம், ரயில்வேயில் எந்த முகாந்திரமும் இல்லாமல் தின்பண்டங்கள் மற்றும் பழங்களை விற்பனை செய்வது குற்றம் என்றும், மீறி விற்பனை செய்தால் ரயில்வே சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள் என்றனர், மேலும், அவர்களிடத்தில் உங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள தமிழக அரசின் சுய உதவி குழுக்களை அணுகி, சிறு, குறு தொழில்களை அவர்களின் உள்ளூர் பகுதியில் அமைத்து விற்பனை செய்து, அதன் மூலம் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
