tamilnadu

img

மின்மாற்றி பழுதடைந்ததால் விவசாயம் பாதிப்பு எம்.சின்னதுரை எம்எல்ஏவிடம் நெப்புகை மக்கள் புகார்

மின்மாற்றி பழுதடைந்ததால் விவசாயம் பாதிப்பு எம்.சின்னதுரை எம்எல்ஏவிடம்  நெப்புகை மக்கள் புகார்

மின்மாற்றி பழுதடைந்ததால் விவசாயம் பாதிப்பு

புதுக்கோட்டை, ஜூலை 17-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகை ஊராட்சியில், மின்மாற்றி பழுதடைந்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகையில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெல், கரும்பு, சோளம், உளுந்து உள்ளிட்ட சாகுபடி நடந்து வருகிறது. போதிய பருவமழை பெய்யாததால் விவசாயம் முழுவதும் ஆழ்துளைக் கிணற்றை நம்பியே உள்ளது. இந்நிலையில், நெப்புகையில் உள்ள மின்மாற்றி பழுதடைந்து பல வாரங்கள் ஆன நிலையிலும் மின்வாரியம் அதை சீரமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், சாகுபடிகள் முழுவதும் வெயியில் கருகி வருகிறது எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்மாற்றியை உடனடியாக சரிசெய்து மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு காய்ந்த பயிர்களுடன் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் செவ்வாய்க்கிழமை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய எம்.சின்னதுரை எம்எல்ஏ, உடனடியாக மின்மாற்றியை சரிசெய்து, மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.  மேலும், கந்தர்வகோட்டை தாலுகா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தாலுகா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.