tamilnadu

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்!

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து  பிப்ரவரி 12 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்!

சென்னை, பிப். 8- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவ சாயிகள் விரோத, தேசவிரோத கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று நடைபெற உள்ள நாடு  தழுவிய மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும் என இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிபிஐ(எம்.எல்)  விடுதலை மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் ஞாயிறன்று கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய பாஜக அரசின் மிகவும் கொடூரமான நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலுக்கு எதிராகவும் 2026 பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள், தொழில்வாரி யான சம்மேளனங்கள், ஐக்கிய விவ சாய முன்னணி அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. தொழிலா ளர்கள், விவசாயிகள் மற்றும் உழைப் பாளி மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முழு ஆதரவினை தெரி வித்துக் கொள்கிறோம். அண்மைக் காலத்தில் நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும், வெளியே யும் மோடி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் மீது அப்பட்டமான தாக்குதலை நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் 100 ஆண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஆதரவாக நான்கு தொகுப்புச் சட்டங்களாக திருத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதி ராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்து போராடி வரு கின்றனர். மிக ஆபத்தான அணுசக்தி சட்டம் அதிக ஆபத்தான அணுசக்தி உற்பத்தித் துறையில், லாப நோக்கத்து டன் செயல்படும் தனியார் மற்றும் வெளி நாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக “இந்தியாவை மாற்று வதற்கான அணுசக்தியின் நிலை யான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (SHANTI)” என்ற  ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதில், அணு சக்தி உற்பத்தியில் விபத்துகள் / பேரழிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான அணு உலை உள்ளிட்ட உப கரணங்களை வழங்கும் வெளிநாட்டு மற்றும் தேசிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளது. இது நமது நாட்டின் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் மட்டுமல்லாமல் மனித உயிரை மதிக்காத போக்குமாகும். கிராமப்புற வேலை பறிப்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டியும், மகாத்மா காந்தி யின் பெயரை நீக்கியும் விபிஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்டத்தை நிறை வேற்றியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கடுமையான வேலையின்மை யால் தவிக்கும் இந்த நேரத்தில், இந்த புதிய சட்டம் உரிமைகள் அடிப்படையிலான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஒழித்துக்கட்டி, வேலை அளிப்பதை ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்டதாக மாற்றி, 40 சதவிகித நிதிச் சுமையையும் மாநிலங்கள் மீது சுமத்துகிறது. அத்துடன், அறு வடைக் காலத்தில் இந்தச் சட்டம் நடை முறைப்படுத்தப்படாது என்று அறி வித்துள்ளது. இது கிராமப்புற விவ சாயத் தொழிலாளர்களின் வேலை உரிமையை பறிக்கும் செயலாகும். இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனு மதிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை யில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங் களைக் கையகப்படுத்தும் உரிமையை வழங்குகிறது. ஒன்றிய அரசு, விக்சித் பாரத் சிக்சா அதிஸ்தான்-2025 என்ற சட்ட முன்வடிவையும் நிறைவேற்றி யுள்ளது. இது கல்வித்துறை அதி காரங்களை மத்தியில் குவிக்கவும் பெரு மளவில் வணிகமயமாக்கவும் வழி வகுக்கிறது. இந்தியாவை அடகு வைக்கும் ஒப்பந்தம் விதை சட்டமுன்வடிவையும், 2025 மின்சார (திருத்த) சட்டமுன்வடிவையும் மோடி அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவுகள் நிறை வேற்றப்பட்டால், அவை விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவன மின் நுகர்வோர், எளிய மக்கள் மற்றும் நமது நாட்டின் பொது மின்சாரத் துறைக்கு பேரழிவை ஏற்படுத்திடும். இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் மாநில உரிமைகள் மீதான தாக்குதல் களாகவும் அமைகின்றன. மேலும், 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிடமிருந்து வரி இல்லாமல் இறக்குமதி செய்வது என அமெரிக்கா - இந்தியா இடை யேயான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இறையாண்மை, விவசாயம், பொரு ளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கும். மோடி அரசின் இந்த அனைத்து கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொழி லாளர்கள், விவசாயிகள் நடத்தி வரும் இயக்கங்களுக்கு வாலிபர், மாணவர், மாதர், மாற்றுத்திறனாளி போன்ற வெகு மக்கள் அமைப்புகளும் தங்களது ஆதர வுக் கரத்தை நீட்டியுள்ளன. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும், விவ சாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் அமைப்புகளும் தீவிரமான நட வடிக்கையில் இறங்கியுள்ளன. பேராதரவு அளிப்பீர்! இந்திய நாட்டின் வளங்களை சூறை யாடி கார்ப்பரேட் மற்றும் பெரு முத லாளிகளுக்கு தாரைவார்க்கும் நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நட வடிக்கைகளை கண்டித்தும், தொழி லாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாது காக்கவும் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக்கிடும் வகையில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும், தமிழக உழைப்பாளி மக்களும், வணிகப் பெருமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)  விடுதலை மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.