மயான இட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம்
அரியலூர், ஆக. 23- ஜெயங்கொண்டத்தில் இஸ்லாமியர்களின் பயன்பாட்டில் உள்ள மயான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஜமாத்துக்குச் சொந்தமான 82 சென்ட் இடத்தில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக 56 சென்ட் இடம் மயானம் பயன்பாட்டில் உள்ளதாகவும், அடக்கத்தின்போது, தொழுகை செய்வதற்காக பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மயானத்துக்கு அருகில் உள்ள இடத்தை மூன்று தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் போதுமானதாக இல்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றித் தர வேண்டும் என கடந்த 50 ஆண்டு காலமாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் வியாழனன்று நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் எனக் கூறி, முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத் ஜனாஸா தொழுகை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு உணவு தயாரிக்கும் பணியும் நடைபெற்று வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஜேசிபி வாகனமும், பாதுகாப்புக்காக அரியலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான காவல்துறையினரும் வந்திருந்தனர். சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்ட வருவாய் துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். மேலும், நகராட்சிப் பணியாளர்களும், மின்சார வாரிய ஊழியர்களும் காத்திருந்தனர். ஆயினும், நடவடிக்கை ஏடுக்காத நிலையில், மாலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வாகனத்தில் ஏறி புறப்பட்டார். இதனால், தங்களுக்கு உரிய பதிலை கூறிவிட்டுச் செல்ல வேண்டும் என ஆணையரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது நகராட்சி ஆணையர் அசோக்குமார் செப்டம்பர் 15 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகத் தெரிவித்தார். அதன் பேரில் தற்காலிகமாக இஸ்லாமிய மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.