பாஜக அல்லாத முதல்வர்கள்- அமைச்சர்களின் பதவியைப் பறிக்க சதி
அமித் ஷா-வின் மசோதாவை நிராகரித்து எம்.பி.க்கள் ஆவேசம்!
புதுதில்லி, ஆக. 20 - அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர் என உயர் பதவி வகிப் போர் தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை சிறைக் காவலில் வைக்கப் பட்டாலே, 31-ஆவது நாளில் அவர்களைத் தானாகவே பதவி இழக்கச் செய்யும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பான அரசிய லமைப்பு (130ஆவது திருத்தம்) மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதன்கிழ மையன்று மக்களவையில், தாக்கல் செய்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் உள் நோக்கத்துடனும், இயற்கை நீதிக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறி அத னை எதிர்க்கட்சிகள் கிழித்து வீசினர். இந்த மசோதா மூலம் பிரத மரும் பதவி இழப்பார் என்று கூறப் பட்டிருந்தாலும் உண்மையில் அது ஏமாற்றுத் தந்திரம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அரசியல மைப்பு (130ஆவது திருத்தம்) மசோதா உட்பட 3 மசோதாக் களையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்விற்கு அனுப்புவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு விரோதமான 3 மசோதாக்கள் தாக்கல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடை பெற்று வரும் நிலையில், இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்கும் வகையிலும் எதிர்க் கட்சிகளை முடக்கும் வகை யிலும் அரசியலமைப்பு (130-வது திருத்தம்) மசோதா, யூனியன் பிரதேசங்கள் (திருத்தம்) மசோதா 2025, மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகிய மூன்று மசோதாக் களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது பிரிவை திருத்தும் வகையில் இந்த அரசியலமைப்பு (130 ஆவது திருத்தம்) மசோதா வை அமித் ஷா தாக்கல் செய்தார். உள்நோக்கம் கொண்ட 130ஆவது திருத்த மசோதா இதில், அரசியலமைப்பு (130-வது திருத்தம்) மசோதாவா னது, “பதவியில் இருக்கும்போது தொடர்ச்சியாக முப்பது நாட் களுக்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை பெரும் வகையிலான குற்றத்தை புரிந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதி நிதி அவ்வாறு காவலில் வைக்கப் பட்ட முப்பத்து ஒன்றாவது நாளுக்குள் பிரதமரால் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் ஆலோசனையின் பேரில், பதவி யிலிருந்து நீக்கப்படுவார்” என்று கூறுகிறது. முப்பத்து ஒன்றாவது நாளுக் குள் குடியரசுத் தலைவருக்கு பிர தமர் ஆலோசனை வழங்க வில்லை என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவர் தானாகவே பதவியை இழப்பார் எனவும் அப்பிரிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமானது பிரதமர், மாநில முதல்வர், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை நீதிக்கு எதிரான விதிகள் இந்த மசோதாவின் மிக கொடூரமான அம்சம் என்ன வெனில், “சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக் கப்பட்டாக வேண்டும் என்பது அவசியம் இல்லை; குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யலாம்” என்பதாகும். மேலும் இந்த நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக குடி யரசுத் தலைவர், மாநில ஆளு நர்கள், யூனியன் பிரதேசங் களின் துணைநிலை ஆளுநர் களுக்கு கூடுதல் அதிகாரங்களை யும் வழங்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆயுதம் ஒன்றிய பாஜக அரசானது, ஏற்கெனவே பொய்யான ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில், அமலாக்கத் துறை, மத்திய புல னாய்வு அமைப்பு உள்ளிட்ட முகமைகளை ஏவிவிட்டு, எதிர்க் கட்சிகளையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை யும் முடக்கிக் கொண்டிருக்கிறது. இதே ஊழல் உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் ஆளும் பாஜகவினர் மீது வைக்கப்படும் போது, இதே அரசு முகமைகள் வேறு விதமாக செயல்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனவே, உண்மையில் இந்த மசோதா பாஜகவின் அரசியல் அதிகார வெறி யை தக்க வைத்துக் கொள் வதற்கு, எதிர்க்கட்சிகளையும் ஜனநாயகத்தையும் முடக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படும் அபாயமே அதிகமாக உள்ளது, என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் அதிகாரம் மேலும் பறிப்பு அதேபோல ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோ தாவானது ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு நேர் மாறாக அமைந்துள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசாங்கத்திற்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் ஒன்றிய அரசின் அதிகாரத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த சதித்திட்டத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களை பலவீனப்படுத்தவே இந்த திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜனநாயகம் மீதான கொடிய தாக்குதல்; சு.வெங்கடேசன் எம்.பி.
ஆகஸ்ட் 19 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை உள்துறை அமைச்சகத்தால் மக்களவைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு, மறுநாளே (ஆகஸ்ட் 20) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பில் 130-ஆவது திருத்தத்தை கோரும் சட்ட மசோதா இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீது தொடுக்கப்பட்ட மற்றுமொரு கொடிய தாக்குதல்” என்று சிபிஎம் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சாடியுள்ளார்.
ஜனநாயக விரோத-அருவருப்பான மசோதா!
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 30 நாட்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் இதர அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்காக மோடி அரசாங்கம் மூன்று சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. இது, ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்கான பாஜக அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகளையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த காலங்களிலும், பல சமயங்களில் நீதித்துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற சட்டமுன்வடிவுகளைக் கொண்டுவர பாஜக முயற்சிகளை செய்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் நவீன பாசிச போக்குகளைக் கருத்தில் கொண்டால், இந்த சட்டமுன்வடிவுகள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை குறிவைப்பதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகும். இந்த நடவடிக்கை அருவருப்பானது மற்றும் ஜனநாயகத்திற்கு அவசியமான கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்களை மறைப்பதற்காகவே இந்த சட்டமுன்வடிவுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த சட்ட முன்வடிவுகளை, முழு பலத்துடன் எதிர்த்துப் போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. மேலும் எதிர்க்கட்சி அணியில் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளும் இந்த தேவையற்ற நடவடிக்கையை கூட்டாக எதிர்க்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. (ந.நி.)