ஹாய், அங்கிள்..
என்னம்மா, புது டிரஸ்சா..?
உள்ளேயிருந்து எட்டிப்பார்த்த அம்மா, சார்... வெக்குறதுக்கு இடமில்லாத அளவுக்கு துணி வாங்கிக்குறா..
ஆமா, அங்கிள்.. இடத்துக்கு ஏதாவது வழி பண்ணனும்..
மஸ்லின் துணி கேள்விப்பட்டிருக்கியா..?
ஓ.. அதுதான் இப்போ இல்லைனு சொல்றாங்களே.. 2013ல இந்தத் துணி நெய்யுறத மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் புலனாகாத பாரம்பரியத்தை சேர்ந்த தலைசிறந்த படைப்புகள்ங்குற பட்டியல்ல யுனெஸ்கோ சேர்த்துருக்கு..
பாத்தியா... இது எனக்குத் தெரியாது. ஆனா, உண்மைலயே இது பாரம்பரியமானதுதான். இராக்குல உள்ள மோசுல் நகரத்துல இதுக்கு கிராக்கி அதிகமா இருந்துச்சு... அந்த நகரத்து பேரதான் இதுக்கும் வெச்சாங்க. அதான் மஸ்லின்னு மாறிடுச்சு.
ரொம்ப மெல்லிசா இருக்கும்னு படிச்சுருக்கேன்.. அது கைத்தறி ஆடைதான அங்கிள்..
ஆமா... கைத்தறி ஆடைதான்.. உலகத்துலயே ரொம்ப மென்மையான, லேசாக நெய்த ஆடை.. 60 அடி நீள மஸ்லின் துணிய ஒரு தீப்பெட்டிக்குள்ள அடக்கிறலாமாம்...
இதுதான் அங்கிள் எனக்கு வேணும்..
ஆனா, நீயே போட்டுக்குவியான்னு எனக்குத் தெரியல..
ஏன் அங்கிள்..?
ஒரு தடவை முகலாய மன்னர் அவுரங்கசீப்போட மகள் அந்த துணில உருவான ஆடையப் போட்டுக்கிட்டு அரசவைக்கு வந்துட்டாராம்.. மன்னருக்கு பெருங்கோபம் வந்து திட்டிட்டாராம்..
ரொம்ப மெல்லிசா இருக்குமே.. அதனாலயா??
ஆமா... இத்தனைக்கும் ஏழு அடுக்கு ஆடை அணிஞ்சுருந்தாராம்..
யாரு அந்த.. ஜெபுன்னிசாவா..?
பரவாயில்லையே... தெரிஞ்சு வெச்சுருக்கியே..
அந்தக் கிசுகிசுக் கதையும் தெரியும்..
அதென்ன...
அவருக்கு சத்ரபதி சிவாஜின்னா ரொம்ப பிடிக்குமாம்... அதனால அவுரங்கசீப்புக்குக் கோபம்.. இத்தனைக்கும் ஜெபுன்னிசாதான் அவருக்கு ரொம்ப செல்லம்..
அது கிசுகிசு இல்ல... சிவாஜி மேல ஜெபுன்னிசா வெச்சுருந்தது மரியாதைனு சிலரும், காதல்னு சிலரும் சொல்றாங்க.. ஆனா, சிவாஜி அதப்பத்தி கண்டுக்கல..
இந்தப் பொண்ண ஏன் அவுரங்கசீப்புக்கு ரொம்ப புடிச்சுது?
மூணு வயசுலயே குர்ஆனப் படிச்சு ஒப்பிச்சுருச்சாம்.. அந்தக் காலத்துல அதிகமா படிச்ச முகலாயர்கள்ல ஒருத்தர்..
அதிகமான்னா எப்புடி அங்கிள்..?
நிறையக் கல்வியாளர்களுக்கு அவர் ஆதரவு குடுத்தார்.. ஒரு பெரிய நூலகமும், அதுல எல்லா மதத்தோட நூல்களும் இருந்துச்சு.. அப்ப இருந்த அறிவியல் கருத்துக்களக் கல்வியாளர்கள் மூலமா உள்வாங்கிக்கிட்டாரு..
பரவாயில்லையே, அங்கிள்.. அதான் அவர அவுரங்கசீப்புக்கு ரொம்ப புடிச்சுதா?
ஆனா, அதே அவுரங்கசீப் தன்னோட பொண்ண சிறைய அடைச்சாரு.. ஷாஜகானாபாத்ல ஒரு கோட்டைல அவர அடைச்சு வெச்சுட்டாரு.. ஷாஜகானாபாத்துதான் இப்ப பழைய தில்லி..
ஓ... இவர்தானா அங்கிள் அது... தன்னோட சகோதரர் பண்ணுன கலகத்துக்கு ஆதரவு குடுத்ததுக்குதான..
ஆமா... நிறைய எழுதியிருக்காரு... பாரசீக மொழில எழுதுன அதையெல்லாம் தொகுத்து திவான்-இ-மக்ஃபினு நூலா மாறிருக்கு.. மஸ்லின் துணியப் பத்தி கல்வியாளர்கள்கிட்ட பேசுவாங்களாம்..
இப்ப மஸ்லின் இல்லியா அங்கிள்
அந்த மஸ்லின் துணிங்குறது வங்கதேசத்துல ஓடுற மேக்னா ஆத்தங்கரைல விளைஞ்ச ஒரு அரிய வகை பருத்திலருந்து செஞ்சது.. அந்தப் பருத்திய மறுபடியும் விளைய வெக்குறதுக்கு முயற்சி பண்றாங்க..
வங்கதேசம் ஜவுளித்துறைல நல்லா வந்துட்டுருக்கே.
ஆமா... ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதில அவங்க இப்போ உலகத்துல ரெண்டாவது இடம்.. நாமதான் அந்த இடத்துல இருந்தோம். இப்போ ஆறாவது இடமாம்.. சீனா முத இடத்துல இருக்கு..
என்ன காரணமாம்...?
பத்து வருஷத்துல சரிவு.. பருத்தி மேல இறக்குமதி வரி நீக்கம், ஐரோப்பிய நாடுகளோட வர்த்தக ஒப்பந்தம்னு கவனம் செலுத்துனா மறுபடி மேல வந்துரலாம்னு சொல்றாங்க..
இருங்க.. இருங்க அங்கிள்... நேத்துதான் படிச்சேன்... இந்தியாவுல முதல் பருத்தி ஆலை கொல்கத்தாவுல கிளாஸ்டர் கோட்டைல அமைச்சாங்க... சரியா..
ஆமா.. 1818ல வந்துச்சு.. ஆனா வர்த்தக ரீதியா அது பெரிய தோல்வி.. 1854ல டேவர்னு ஒருத்தர் மும்பைல ஆலைய அமைச்சாரு.. அதுதான் இந்தியாவுல நவீன பருத்தி ஆலைகளுக்கு அடித்தளமா மாறுச்சு..
அடித்தளம் ரொம்ப முக்கியம்தான.. தேர்வுக்கு நானும் போடணும்.. வர்றேன், அங்கிள்.