tamilnadu

img

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் தொடர வேண்டும்

குழித்துறை, மார்ச் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மதுரையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 30,31. ஏப்ரல் 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி கலந்து கொள்கிறார்கள். கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 6 முதல் 10 வரை அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. மாநில அரசின் பட்ஜெட்டில் வரவேற்க வேண்டிய பல அம்சங்கள்  உள்ளன. கல்விக்கு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு முதலீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பயிர்கடன், நகைக்கடன்,  சுய உதவிக்குழு  கடன்கள் உட்பட சுமார் 4131 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் வேளாண் கடன்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அந்த தொகையை வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு கொடுத்தால்தான் அவை இயல்பாக செயல்பட முடியும். மாணவர்கள் பஸ்பாஸ், பெண்களுக்கான இலவச பயணம் போன்ற வற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது நல்ல விசயம். போக்குவரத்து துறைக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வேண்டும். அதற்கு தேவை யான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறு தியின்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத்திட்டம் அமலாக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மனிதவள மேம்பாட்டுக்கென குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கென நிதியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கல்வி நிலையங்கள் உட்பட காலியிடங்களை அறிவிப்பதும், அவற்றை உடனுக்குடன் நிரப்புவதும் அவசியம் என்றார். உள்ளாட்சி தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறுப்புகளில் இருந்து திமுகவினர் ராஜினாமா செய்யுமாறு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதியை திமுக தலைமை நிறைவேற்ற வேண்டும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.